
Kavin Bigg boss
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியின் இறுதி நாள் கொண்டாட்டத்தில் போட்டியில் பங்கேற்ற ஒரு சிலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கி, 105 நாட்களுடன் நேற்றுடன் முடிவடைந்தது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், 100 நாட்களைக் கடந்து பிக் பாஸ் வீட்டில் முகேன், லாஸ்லியா, சாண்டி, ஷெரின் ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகினர். நடிகர் கமல் ஹாசன் மூன்றாவது முறையாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாகவே பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெறப்போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தொடர்ந்து, நேற்று மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் டைட்டில் வின்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதிப் போட்டியாளர்களாக இருந்த நால்வரில் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், ஷெரின் வெளியேற்றப்பட்டார்.
இறுதியாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை முகேன் பெற்றுள்ளார். முகேன் 'கோல்டன் டிக்கெட் ஃபினாலே' என்ற டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் நபராக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவர்.
முகேனைத் தொடர்ந்து, இரண்டாம்(ரன்னர்) இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டியும், அதைத்தொடர்ந்து மூன்றாம் இடத்தை முறையே லாஸ்லியா பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, போட்டியாளர்களில் ஒரு சிலருக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி, பிக் பாஸ் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற கவினுக்கு 'கேம் சேஞ்சர்' (Game Changer) விருது வழங்கப்பட்டது.
முக்கியப் போட்டியாளராக இருந்த தர்ஷனுக்கு 'ஆல் ரவுண்டர்'(All rounder) விருது வழங்கப்பட்டது. இயக்குநர் சேரனுக்கு 'ஒழுக்கமானவர்'(Discipline), ஷெரீனுக்கு 'நட்பானவர்' (Friendly) மற்றும் வனிதாவுக்கு 'தைரியமிக்கவர்' (Guts) என்ற விருதுகள் வழங்ப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...