Enable Javscript for better performance
எதற்காக ஆன்லைன் டிக்கெட்டிங்?- Dinamani

சுடச்சுட

  
  actor

  சினிமா வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்படுவது, அரசு அறிமுகப்படுத்த விரும்பும் ஆன்லைன் டிக்கெட்டிங் முறை என்கிற இணையதளம் மூலம் சினிமாவுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் முறை.

  ரயில் டிக்கெட், பேருந்து டிக்கெட், மின்சாரம், தொலைபேசிக் கட்டணம், வீட்டு வரி போன்றவற்றைபோல, சினிமாவுக்கான டிக்கெட்டும் இணையம் மூலம் விற்கும் முறையை அறிமுகப்படுத்த விரும்புகிறது தமிழக அரசு. 

  காலப்போக்கில் இணையத்தின் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட் விற்க வேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டால் கள்ள மார்க்கெட்டிலும், அதிகக் கட்டணத்திலும் பிரபல நடிகர்களின் திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்கப்படுவது தடுக்கப்படும். அவர்களது சம்பளம் கட்டுப்படுத்தப்படும். ஆனால் அது சாத்தியம்தானா?

  பாமரன் முதல் மெத்த படித்த மேதை வரை அனைத்துத் தரப்பினரையும் ஒருசேர பாதிக்கக்கூடிய ஒன்று சினிமாதான். 
   19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய சினிமா, மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மற்ற எந்தக் கலையாவது செய்திருக்கிறதா என்றால் இல்லை.
   ஆரம்பத்தில் கலையாக கருதப்பட்ட சினிமாதுறை,  தற்போது கோடிகள் புரளும்  மாபெரும் தொழிலாக மாறிவிட்டது.  அதனால் இவற்றைக் கண்காணிக்க மத்தியிலும், மாநிலத்திலும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.
  சினிமா தொழில்துறை எனும்போது படங்களை உருவாக்கும் தயாரிப்பாளர்கள்,விநியோகஸ்தர்கள், அவற்றைத் திரையிடும் திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்குகளில் பணம் கொடுத்துப் பார்ப்பவர்கள் எல்லோருமே இதில் அடங்குவர்.

  நசிவுக்கு காரணம் என்ன?  
  உலகிலேயே அதிகமாகத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் இந்தியா முன்னணியிலும், இந்தியாவில் தமிழகம் முன்னணியிலும் உள்ளது. மற்ற எல்லா மாநிலங்களை விடவும் அதிகமான படங்களைத் தயாரிக்கும் தமிழகத்தில்தான் சினிமா துறை சார்ந்த பிரச்னைகளும் அதிகமாக உள்ளன.   நியாயமாகப் பார்த்தால், அதிக படங்களைத் தயாரிக்கும் தமிழகத்தில் சினிமா துறை செழித்து மேலோங்கியிருக்க வேண்டும்.  இத்தனைக்கும் 1967-ஆம் ஆண்டிலிருந்து 2016 வரை சினிமா துறையிலிருந்தவர்கள்தான் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.
    ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. சினிமா தொழில் நசிந்து வருவதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இன்றைய சூழலில் டிக்கெட் கட்டணம், பைரசி, படத்தின் மிதமிஞ்சிய தயாரிப்புச் செலவு, நடிகர்களின் சம்பளம் போன்ற காரணிகளே முக்கியத்துவம் பெறுகின்றன.
  இப்போதுள்ள சூழலில் ஒரு மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் குடும்பத்துடன் படம் பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் நான்கு பேருக்கு ரூ.1,500 வரை செலவாகிறது. வீட்டிலிருந்து பயணிக்கும் செலவு, பார்க்கிங் கட்டணம், டிக்கெட் கட்டணம், குறைந்த அளவு நொறுக்குத்தீனி போன்றவற்றுக்கு மட்டும் கணிசமாக செலவாகிறது.

  கேள்வி கேட்காத நுகர்வோர் அமைப்பு 
  டிக்கெட் ஒரு புறம் இருந்தாலும், அதற்கு சமமாக பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திரையரங்கினுள் விற்கப்படும் குடிநீர், உணவுப் பொருள்கள் போன்றவற்றின் விலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். திரைப்படம் பார்க்க வரும் வாடிக்கையாளர், தனது வீட்டிலிருந்தோ, சொந்த செலவில் வெளியிலிருந்து எதுவும் வாங்கி வரவோ அனுமதிப்பதுமில்லை. இதை எந்த நுகர்வோர் அமைப்பும் தட்டிக்கேட்பதும் இல்லை.
  சென்னையில் உள்ள ஐநாக்ஸ், சத்யம், ஃபாரம் மால், மாயாஜால், பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உள்ள திரையரங்குகளில் உணவுப் பொருள்களின் விலைப் பட்டியலைப் பார்த்தால் தலைச் சுற்றும். உதாரணமாக  சோளப் பொரி.  அதன் மொத்த உள்ளடக்க விலையே ரூ.10-க்குள்தான் இருக்கும். ஆனால், இங்கு அதன் குறைந்தபட்ச விலை ரூ.170.

  வெளியூர் திரையரங்குகளிலும் ஏமாற்றம் 
  இந்தத் தனிமனித உரிமை மீறல் எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. சரி... மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில்தான் இந்த நிலை என்றால், சாதாரணத் திரையரங்கம் மற்றும் வெளியூர் திரையரங்குகளில் நடக்கும் கூத்து இதைவிட பயங்கரமாக உள்ளது. 
  ரூ.30-க்கு டிக்கெட் கொடுப்பார்கள். ஆனால் நம்மிடமிருந்து ரூ.70, ரூ.100 என வசூலித்து விடுகிறார்கள். அதிலும் முன்னணி நடிகர்கள் நடித்த படம் என்றால் ரூ.150 முதல் ரூ.500 வரை அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நமக்கு தருவது ஒரு ரிசர்வேஷன் ஸ்லிப்பையோ அல்லது ரூ.20, ரூ.25 என அச்சிடப்பட்ட டிக்கெட்டையோ தான். 
  நம்மிடம் தரும் அந்த ரூ.30 டிக்கெட் அடிப்படையில்தான் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி தரப்படுகிறது. அதைத்தான் டி.சி.ஆர். எனப்படும் டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்டிலும் குறிப்பிடுகிறார்கள்.

   வெளிவராத உண்மை நிலவரம்
  இப்படி இருக்கும்போது ஒரு படத்தின் உண்மையான வசூல் நிலவரம் எப்படி தெரிய வரும். அதிகமாக வசூலிக்கும் தொகையை தியேட்டர்காரர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? 
  விநியோகஸ்தர்கள் எடுத்துக் கொள்கிறார்களா? அதில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு இருக்கிறதா? என்பதெல்லாம் அந்த துறையில் உள்ளவர்களுக்கே வெளிச்சம்.
   பிறகு மக்கள் என்ன செய்வார்கள். திருட்டு வி.சி.டி. 
  பக்கம்தான் செல்வார்கள். ஊரறிந்த இந்த ரகசியம் யாருக்கும் தெரியாததுபோல் இருப்பதுதான் வேதனை. 

   ஏறிக் கொண்டே போகும்சம்பளம்
  எல்லா முறைகேடுகளையும் கண்டும் காணாமல் இருந்து விட்டு அல்லது லாபத்தை ஒரு சாரார் மட்டுமே அனுபவித்து விட்டு தொழிலில் நஷ்டம் ... நஷ்டம் என்று புலம்பியபடி இருக்கிறது சினிமா துறை.
   நல்ல படங்களைப் பார்க்க மக்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். திருட்டு வி.சி.டி.யால் ஒரு நல்ல படத்துக்குக் கிடைக்கும் வசூலையோ, வரவேற்பையோ தடுத்துவிட முடியாது. இதற்கு உதாரணமாக பல படங்களைக் கூறலாம். ஏன்.. கடந்த சில ஆண்டுகளில்  மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி 2 படத்துக்கு திருட்டு வி.சி.டி. வரவில்லையா? அந்தப் படத்துக்கும் இரண்டு மூன்று நாள்களில் திருட்டு வி.சி.டி. வந்து விட்டது. பிறகு எப்படி இந்தப் படம் வசூலையும், வரவேற்பையும் பெற்றது. மக்களை கவர்ந்து விட்டது.

  அவ்வளவுதான்!
   படத்தின் தயாரிப்பு செலவு அதாவது பட்ஜெட் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், அதில் பெரும் தொகை நடிகர்களின் சம்பளத்துக்கே சென்று விடுகிறது. தொடர்ச்சியாக ஐந்து தோல்வி படங்கள் கொடுக்கும் நடிகர் அடுத்தடுத்து தன்னுடைய சம்பளத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே போகிறார். இது தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடியை அளிக்க, அவர் திரையரங்கு உரிமையாளர்களிடம்  குறைந்தபட்ச உத்தரவாதம் (மினிமம் கியாரண்டி) கேட்கிறார். 

  திரையரங்கு உரிமையாளர் என்ன செய்வார்...?
  இவ்வளவு பிரச்னைகளை கடந்து, அதிக விலை கொடுத்து வாங்கிய படத்துக்கு நிர்ணயித்ததை விட அதிக கட்டணத்தைதான் வாங்குவர். மல்டி பிளக்ஸ் தவிர்த்த தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு தயாரிப்பாளர்களும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களும்தான் காரணமே தவிர விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கிடையாது. தயாரிப்புச் செலவு குறையும் வரை சினிமா வெற்றிகரமாக அமையாது. 
  இது ஒரு வாதம் என்றால், இன்னொரு வாதமும் இருக்கிறது.
  எந்தவித கட்டுப்பாடோ, வரைமுறையோ இல்லாமல் தியேட்டர்கள் அதிகக் கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் சம்பாதித்து கொள்ள  முடியும் என்பதால், நடிகர்கள் அதிக சம்பளம் கேட்கத் தொடங்குகிறார்கள். தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், தன்னுடைய படத்தின் டிக்கெட் ரூ. 250-க்கு விற்கிறது என்றால் எனது மார்க்கெட்டை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி நடிகர் தனது சம்பளத்தை அதிகரிக்கும்போது, தயாரிப்பாளர் தனது படத்தை அதிக விலைக்கு விற்கிறார். தியேட்டரில் மீண்டும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு சுழற்சி முறையில் இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது தீர்க்கவே  முடியாத இடியாப்பச் சிக்கல்.  இதனால் பாதிக்கப்படுவது சராசரி ரசிகர்களும்,  பொழுது போவதற்காக சினிமாவுக்குச் செல்லும் சாமானிய மக்களும்தான். 

  திரையரங்க உரிமையாளர்கள் சொல்வது என்ன...?
  அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வாங்கினால், ஒரு சாதாரண நடிகரின் படம் 300 நாள்கள் ஓடினாலும், அந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு கூட வசூலாகாது.
  ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட போதுதான்  அரசு புதிய கட்டணக் கொள்கையை கொண்டு வந்தது.  
  அரசு நிர்ணயித்த கட்டணப்படி பெறப்படும் வசூல் தியேட்டர்களின் நிர்வாக, பராமரிப்புச் செலவுகளுக்கே போதாது. பிறகு எப்படி தொழில் நடத்துவது. 
  பெரிய பட்ஜெட் படம் என்று கூறி தங்களிடம்  தயாரிப்பாளர்கள் அதிக எம்.ஜி. (மினிமம் கியாரண்டி) கேட்கிறார்கள். போட்ட பணத்தை எடுக்க தங்களுக்கு வேறு வழியில்லை என்பது அவர்கள் தரப்பு வாதம். 
  பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டீயின் விலை ரூ. 6 என்றால் இப்போது அதன் விலை ரூ. 12. விலைவாசி உயர்வு காரணமாக எல்லா கட்டணங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்போது, தியேட்டர் கட்டணத்தை குறையுங்கள் என்றால் எப்படி என்பது தியேட்டர் உரிமையாளர்களின் வாதம்.     

  சாத்தியமா?
  தற்போது அரசு அறிவித்துள்ள ஆன்லைன் டிக்கெட்டிங் ஒருங்கிணைப்பு மூலம், ஒரு படத்தின் உண்மையான வசூல் என்ன, அதில் லாபம் எவ்வளவு என்பது தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு காட்சிக்குமே வெளிப்படையாகத் தெரிந்துவிடும்.
  அதேபோல ஒரு நடிகருக்கான ஓபனிங் என்ன, இயக்குநருக்கான ஓபனிங் என்ன என்பது துல்லியமாக வெளிச்சத்துக்கு வந்துவிடும். 
  அதை வைத்து அவர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது இனி சுலபமாகிவிடும்.
  அப்படியொரு காலம் தமிழ் சினிமாவுக்கு வருமா...? வர வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு...!

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai