மாநாடு படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன்: தயாரிப்பாளர் உறுதி!

மாநாடு படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன்: தயாரிப்பாளர் உறுதி!

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
Published on

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெங்கட் பிரபுவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் அவர் கூறியதாவது: அரசியல் கூட்டங்களை முன்வைத்து மாநாடு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. காட்சியில் எங்களுக்கு நிறைய கூட்டம் தேவைப்படும். படப்பிடிப்புக்கான தடையை அரசு விலக்கினாலும் 70, 80 பேர் மட்டும் தான் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டால் மாநாடு போன்ற ஒரு படத்தின் படப்பிடிப்பை எப்படி நடத்த முடியும்? அதே படக்குழுவினருடன் இணைந்து வேறொன்றைப் படமாக்க யோசித்து வருகிறோம் என்றார். அந்தச் செய்திக்கு மாநாடு படம் கைவிடப்பட்டதா என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியை முன்வைத்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

மாநாடு படத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று கூறியிருந்தார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் 2018-ம் வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு 2019 ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக அறிவித்தார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ‘நடிக்க இருந்த’ மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்று அவர் அறிக்கை வெளியிட்டார். 

இதன் பிறகு, சிம்புவின் புதிய படம் குறித்து டி.ராஜேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சிம்பு அடுத்ததாக மகா மாநாடு என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடி என்றும் அறிவித்தார். 5 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

திடீர் திருப்பமாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி - சிம்பு இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக சிம்பு அறிவித்தார். படப்பிடிப்புக்குச் சரியாக வந்து ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்ததால் மாநாடு படத்துக்கு மீண்டும் உயிர் வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com