கே.வி. ஆனந்த் மறைவு: ரஜினி இரங்கல்

கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
படம் - twitter.com/anavenkat
படம் - twitter.com/anavenkat

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்தின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். கோ, அயன், மாற்றான், அனேகன், கவண், காப்பான் எனப் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக ஆரம்பத்தில் பணியாற்றிய கே.வி. ஆனந்த், மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாளப் படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். காதல் தேசம் படம் மூலமாகத் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது.

கே.வி. ஆனந்தின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

சிவாஜி படத்தில் கே.வி. ஆனந்துடன் பணியாற்றிய ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com