/

விவாகரத்து: நட்சத்திர தம்பதி ஆமிர் கான் - கிரண் ராவ் அறிவிப்பு

இந்த விவாகரத்தை முடிவாகப் பார்க்காமல் புதிய பயணத்தின் தொடக்கமாகப் பாருங்கள்...

News image
Updated On :3 ஜூலை 2021, 6:52 am

DIN

நட்சத்திர தம்பதியரான பிரபல நடிகர் ஆமிர் கானும் கிரண் ராவும் 15 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடர விரும்புவதால் பிரிவதாகத் தெரிவித்துள்ளனா்.

பிரபல நடிகர் ஆமிர் கான், 1986-ல் நடிகை ரீனா தத்தாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜுனைத் என்கிற மகனும் ஐரா என்கிற மகளும் உள்ளார்கள். 2002-ல் விவாகரத்து பெற்று ஆமீர் கானும் ரீனா தத்தாவும் பிரிந்தார்கள். லகான் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை 2005-ல் திருமணம் செய்தார் ஆமிர் கான். 2011-ல் ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்தார். 

இந்நிலையில் 15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிவதாக ஆமிர் கானும் கிரண் ராவும் இன்று அறிவித்துள்ளார்கள். இதுபற்றி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ளோம், கணவன் - மனைவியாக அல்லாமல் இணை பெற்றோராக. இருவரும் திட்டமிட்டு சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்தோம். இப்போது நாங்கள் தனித்தனியாக வாழ்வதை முறைப்படி அறிவித்து அதேசமயம் ஒரே குடும்பமாக எங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளவுள்ளோம். எங்கள் மகன் ஆசாத்தின் பெற்றோராக இருப்போம். அவனை ஒன்றாக வளர்ப்போம். எங்களுக்குப் பிடித்த படங்களில், அறக்கட்டளைப் பணிகளில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். 

Story image

எங்கள் உறவில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவர்கள் இல்லாமல் இந்த முடிவை எடுத்துவிட்டு பாதுகாப்பாக உணரமாட்டோம். எங்களைப் போல நீங்களும் இந்த விவாகரத்தை முடிவாகப் பார்க்காமல் புதிய பயணத்தின் தொடக்கமாகப் பாருங்கள் - கிரண் & ஆமிர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.