கமல் இல்லம் என தன் வீட்டுக்குப் பெயரிட்டவர்: இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல்

பொலிவோடு இருக்க வேண்டும், கமல் பார்த்தால் திட்டுவார் என்று சொல்லி வந்தார்
கமல் இல்லம் என தன் வீட்டுக்குப் பெயரிட்டவர்: இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல்
Published on
Updated on
1 min read

நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன் என்று இயக்குநர் ஜி.என். ரங்கராஜனின் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.

கமல் ஹாசன் நடித்த கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, எல்லாம் இன்பமயம், மகாராசன் படங்களை இயக்கியவர் ஜி.என். ரங்கராஜன். இவர் இயக்கத்தில் தொடர்ந்து நான்கு படங்கள் 175 நாள்களுக்குத் திரையரங்குகளில் ஓடியதால் புகழ்பெற்ற இயக்குநராக இருந்தார். முத்து எங்கள் சொத்து, அடுத்தாத்து ஆல்பர்ட், மனக்கணக்கு, பல்லவி மீண்டும் பல்லவி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகன் ஜி.என்.ஆர். குமரவேலன் - நினைத்தாலே இனிக்கும் (2009), யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கியுள்ளார். அருண் விஜய் நடிப்பில் சினம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். 

இந்நிலையில் இன்று காலை மாரடைப்பால் ஜி.என். ரங்கராஜன் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

ஜி.என். ரங்கராஜனின் மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகாராசன் என என்னை வைத்து பல வெற்றிப் படங்களைத் தந்தவர். என் மீது கொண்ட மாறாத அன்பால், தான் கட்டிய வீட்டுக்கு கமல் இல்லம் என்று பெயர் வைத்தார்.

ஜி.என்.ஆர். தன் வீட்டில் இல்லையென்றால் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில்தான் இருப்பார் என்றே எங்களை அறிந்தவர்கள் சொல்வார்கள். சினிமாவில் மட்டுமல்ல, மக்கள் பணியிலும் என்னை வாழ்த்தியவர். எப்போதும் எங்கும் என் தரப்பாகவே இருந்தவர். 

சில நாள்களுக்கு முன்பு கூட முகச்சவரம் செய்து பொலிவோடு இருக்க வேண்டும், கமல் பார்த்தால் திட்டுவார் என்று சொல்லி வந்தார்  என கேள்வியுற்றேன். தான் ஆரோக்கியமாக இருப்பதையே நான் விரும்புவேன் என்பதை அறிந்தவர். 

நிபந்தனையற்ற தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன். அண்ணி ஜக்குபாய்க்கும் தம்பி இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலனுக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com