'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலை சித் ஸ்ரீராம் பாடியதில் என்ன பிரச்னை?

சிவாஜி கணேசனின் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் முறை விமர்சனத்துக்குள்ளானது.
'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலை சித் ஸ்ரீராம் பாடியதில் என்ன பிரச்னை?

கடல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடியே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். ஆங்கில பாணியில் உச்சரிப்பு, பாடலை மிக இழுத்து இழுத்து பாடுவது என தனக்கென தனி பாணியைக் கொண்டிருந்தார். துவக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானே இவரை அதிகம் பயன்படுத்தினார். 

ஐ படத்தில் என்னோடு நீயிருந்தால், அனிருத் இசையில் நானும் ரௌடி தான் படத்தில் எனை மாற்றும் காதலே, 24, மெய் நிகரா போன்ற பாடல்கள் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு யார் இவர் என்று கவனிக்க வைத்தது. 

அப்போது வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் தள்ளிப்போகாதே பாடல் வெளியாகி அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் பாடல் தெலுங்கிலும் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற இன்கேம் காவாலே பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணியாகவும் அமைந்தது. 

பின்னர் வெளியாகும் படங்களில் சித் ஸ்ரீராம் ஒரு பாடலையாவது பாடியிருக்க வேண்டும் என இசையமைப்பாளர்களுக்கு தயாரிப்பாளர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர் பாடியிருப்பது ஒரு வகையான விளம்பர யுக்தியாக பார்க்கப்பட்டது. 

சைக்கோ படத்தில் சித் ஸ்ரீராம் பாட வேண்டும் என இசைஞானி இளையராஜாவிடம் மிஷ்கின் கோரிக்கை வைத்ததாகவும், பின்னர் வேறு வழியின்றி அவர் ஒப்புக்கொண்டதாகவும் மிஷ்கின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இளையராஜா மட்டுமல்ல, தமிழ், தெலுங்கில் அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுக்கும் அப்போது இதே நிலை தான். 

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக சித் ஸ்ரீராம் குரலை கேட்டுக்கொண்டிருந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாதா? மெல்ல அவரை பாட வைப்பதை இசையமைப்பாளர்கள் குறைத்துக்கொண்டனர். பாடகராக மட்டுமல்லாமல் வானம் கொட்டட்டும் படத்துக்கு சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற கர்நாடக இசை விழாவில் சித் ஸ்ரீராம் 'கர்ணன்' படத்தின் ஒப்பற்ற பாடலான உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைத் தம் பாணியில் பாடியிருந்ததைப் பகிர்ந்திருந்தார்.

திடீரென இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் அந்தப்  பாடலின் தரத்தைக் கெடுத்துவிட்டதாக அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். ஒரு சிலர் கர்ணன் படத்தில் சிவாஜி இறக்கும் காட்சியை அவர் பாடியதுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.

1964 ஆம் ஆண்டில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கர்ணனின் இறப்பின்போது இடம் பெறும் இந்தப் பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் -  ராமமூர்த்தி இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருப்பார். படத்தில் கர்ணனாக சிவாஜிகணேசனும் கண்ணனாக என்.டி.ராமராவும் வருவார்கள்.

இன்றைக்கும் கணீரென ஒலிக்கும் ஈடுசெய்ய முடியாத இந்தப் பாடலை எதற்காக இப்படிப் பாடினார் இவர் எனக் கொந்தளிக்கிறார்கள் ஏராளமானோர்.

புதிய பாடல்களை அவர் எப்படி வேண்டுமானாலும் பாடிவிட்டுப்  போகட்டும். புகழ்பெற்ற - மேதைகளின் உருவாக்கத்தில் ஒலித்த ஒரு பாடலை அந்தப் பாடலின் தரம் குறையாமல்  பாடியிருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

குறிப்பாக, பாடலில் இடம் பெறும் சொற்களை அவர் உச்சரிக்கும் விதம்  கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது. வல்லவன் வகுத்ததடா என்பதில் வகுத்த'தா'டா என்று பாடியிருப்பதாக விமர்சித்து வருகின்றனர். தம்பிக்கு அண்ணன் இல்லை என்ற ஒற்றை வரியின் உருக்கம் படாதபாடு படுகிறது இவரிடம். 

புதிதாக இசையமைத்துப் பாடுவதற்கு எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன. ராகம் தாளத்துடன் எவ்வளவோ எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் பாரதி. இன்னும் எவ்வளவு பேர், எவ்வளவு பாடல்கள். இத்தனையையும் விட்டுவிட்டு, இத்தகைய புகழ்பெற்ற பாடலையா இவ்வாறு உருக்குலைப்பார்கள் என்ற எரிச்சல்தான் சமூக ஊடகங்களில் பலரிடம். ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்கத்தான் செய்கின்றன.

சித் ஸ்ரீராம் மட்டும் அல்ல, இனி பழைய பாடல்களைப் பாட விழைவோர்  கொஞ்சம்  கூடுதல் கவனத்துடன் அக்கறையெடுத்துப் பாட வேண்டும் என்பதுதான் அனைவரின்  விருப்பமும். இல்லாவிட்டால் உள்ளதும் போச்சுடா... என்றாகிவிடும் ஆபத்து இருக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com