விவசாயிகள் போராட்டம் பற்றி பாடகி ரியானா கருத்து: பாலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு

இந்தியாவின் கொள்கை விவகாரங்கள் குறித்த தவறான பிரசாரங்களுக்கு இரையாக வேண்டாம்.
விவசாயிகள் போராட்டம் பற்றி பாடகி ரியானா கருத்து: பாலிவுட் பிரபலங்கள் எதிர்ப்பு

தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபல பாடகி ரியானாவின் கருத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள். 

புதிய வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியின் சிங்கு, டிக்ரி உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு தொடா்ந்து 2 மாதங்களுக்கு மேலாக  பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.  

ஸ்வீடனைச் சோ்ந்த சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா தன்பா்க், பாடகியும் நடிகையுமான ரியானா உள்ளிட்ட பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். விவசாயிகள் போராட்டம் பற்றிய ஒரு செய்தியைப் பகிர்ந்து, இதைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பினார் ரியானா. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய வேளாண் சட்டங்கள் மூன்றும், வேளாண் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவையாகும். அந்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை சில சுயநலவாதிகள் சா்வதேசப் பிரச்னையாக மாற்ற முயல்கின்றனா். இந்தியாவின் ஜனநாயக உரிமை மற்றும் சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் பேசி பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான அரசின் முயற்சி ஆகிய கண்ணோட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தை அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பதற்கு முன்னரும், அனைவரும் இந்தப் பிரச்னையைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியானாவின் ட்வீட்டை முன்வைத்து நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டரில் கூறியதாவது: யாரும் இதைப் பற்றி பேசுவதில்லை. ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவைப் பிரிக்க நினைக்கும் தீவிரவாதிகள். இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவை சீனா ஆக்கிரமித்து, அமெரிக்காவைப் போல ஒரு சீன காலனித்துவ நாடாக மாற்ற முயற்சி செய்கிறது. அமைதியாக உட்கார் முட்டாளே, உங்களைப் போல நாங்கள் நாட்டை விற்பவர்கள் அல்ல என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து ரியானாவுக்கு எதிரான ட்வீட்களை கங்கனா வெளியிட்டு வருகிறார்.

பாடகி ரியானா
பாடகி ரியானா

இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாடகி ரியானாவின் கருத்துக்கு மறைமுக எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். ட்விட்டரில் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள்:

அஜய் தேவ்கன்

இந்தியா மற்றும் இந்தியாவின் கொள்கை விவகாரங்கள் குறித்த தவறான பிரசாரங்களுக்கு இரையாக வேண்டாம். இச்சமயத்தில் மோதல் இன்றி அனைவரும் ஒற்றுமையாக இருப்பது முக்கியம். 

அக்‌ஷய் குமார்

இந்தியாவின் முக்கியமான அங்கம், விவசாயிகள். அவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இணக்கமான தீர்வு காணும் முயற்சிக்கு ஆதரவளிப்போம். அதற்குப் பதிலாக, பிளவுபடுத்தும் யார் மீதும் கவனம் செலுத்தக் கூடாது. 

சுனில் ஷெட்டி

பாதி உண்மையை விட ஆபத்தானது எதுவும் இல்லை. நாம் எப்போதும் விரிவான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். 

கரண் ஜோஹர்

நாம் கடினமான காலகட்டத்தில் வாழ்கிறோம். ஒவ்வொரு பிரச்னையிலும் விவேகமும் பொறுமையும் அவசியம். அனைவருக்குமான தீர்வுக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு. யாரும்  நம்மைப் பிரிக்க விடமாட்டோம். 

பாடகி லதா மங்கேஷ்கர்

இந்தியா அற்புதமான நாடு. இந்தியர்களான நாம் தலை நிமிர்ந்து நிற்கிறோம். ஓர் இந்தியனாக, எனக்கு நம்பிக்கை உள்ளது, நாம் சந்திக்கும் எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும் மக்களின் கருத்துகளை மனத்தில் கொண்டு, அவற்றை இணக்கமாகத் தீர்க்கும் வசதி நம்மிடம் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com