''சூர்யா போல அனைவரும் உணர்ந்தால் நல்லது'': 'ஜெய் பீம்' படம் குறித்து இயக்குநர் சேரன் கருத்து

ஜெய் பீம் படம் குறித்து நடிகர் சூர்யாவிற்கு இயக்குநர் சேரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
''சூர்யா போல அனைவரும் உணர்ந்தால் நல்லது'': 'ஜெய் பீம்' படம் குறித்து இயக்குநர் சேரன் கருத்து

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள ஜெய் பீம் படம் கடந்த 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் ஜெய் பீம் படத்தைப் பாராட்டி வருகின்றனர். 

சூரரைப் போற்று திரைப்படத்தைப் போல இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் படம் உருவாகியுள்ளது. 1995 ஆம் ஆண்டு பழங்குடியினரான ராசாக்கண்ணு என்பவருக்கு காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட அநீதியை இந்தப் படம் பேசியுள்ளது.  

இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியை குறிப்பிடும் சின்னம் கொண்ட காலண்டர் எதிர்மறை வேடத்தில் நடித்திருந்தவர் வீட்டில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த சின்னம் அகற்றப்பட்டது. 

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதனையடுத்து அவருக்கு நடிகர் சூர்யா அளித்த பதிலில், ''எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் இல்லை. படைப்புச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று விளக்கமளித்திருந்தார். 

இந்த நிலையில் ''ஒடுக்கு முறைக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி' என 'ஜெய் பீம்' படம் குறித்து நடிகர் சூர்யாவிற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாழ்த்து கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.

இதனைப் பகிர்ந்த இயக்குநரும் நடிகருமான சேரன், ''எப்படியோ ஒரு நடிகரை இந்த சினிமா கமர்சியல் சினிமாவிலிருந்து விடுவித்து மக்களுக்கான சினிமாவை எடுக்க ஊக்குவித்திருக்கிறது. மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் இதுபோல சமூகத்திற்கான படங்கள் செய்தால் சென்றடையும் வீச்சை, வித்தியாசத்தை சூர்யா போல அனைவரும் உணர்ந்தால் நல்லது. 

'ஜெய் பீம்' படம் பார்த்து தங்கள் கதாநாயகர்களும் இதுபோன்ற சமூகத்திற்கான உண்மையான பிரச்னைகளை மையமாக வைத்து சோடனை இல்லாத சினிமாக்களை எடுத்தாரல் நன்றாக இருக்கும் என நினைக்கும் அன்பு ரசிகர்கள் அவரவர் ஆதர்ச நாயகர்களுக்கு சொல்லுங்கள். வருடம் ஒரு படமாவது முயலுங்கள்'' என்று நன்றி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com