ரஜினிக்கு சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்கும் ஸ்டைல் வந்தது இப்படித்தான்! வகுப்புத் தோழன் ருசிகரம்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி என்றால், ரஜினியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழக திரை ரசிகர்கள் பலருக்கும் தெரியும் இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் என்று.
ரஜினிக்கு சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கும் ஸ்டைல் வந்தது இப்படித்தான்! வகுப்புத் தோழன் ருசிகரம்
ரஜினிக்கு சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கும் ஸ்டைல் வந்தது இப்படித்தான்! வகுப்புத் தோழன் ருசிகரம்


கோழிக்கோடு: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி என்றால், ரஜினியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழக திரை ரசிகர்கள் பலருக்கும் தெரியும் இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் என்று.

ரஜினியின் ரசிகர்கள் பல்வேறு வகையில் தனது தலைவரின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், ரஜினிகாந்த் உடன் படித்த பள்ளித் தோழர் கே.சி. ஜேம்ஸ் நம்முடன் பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் இவை.

திங்கள்கிழமை தனது 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஜினிகாந்த்துக்கு பல்வேறு தரப்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகள் வந்து குவிகிறது.

கோழிக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட ஜேம்ஸ், தென்னிந்திய திரைப்படக் கல்லூரியில் 1974 - 75ஆம் ஆண்டுகளில் ரஜினிகாந்த்துடன் நடிப்புப் பயிற்சி பெற்றவர். அப்போது ரஜினி எவ்வாறு திரைத் துறையின் மீது ஆர்வத்துடன் இருந்தால், நடிப்பில் தனது தனித்திறனை வெளிப்படுத்தினார் என்பது பற்றியெல்லாம் அவர் மனம் திறந்துள்ளார்.

ரஜினி பற்றி நினைத்ததும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும் என்று ஜேம்ஸிடம் கேட்ட போது, கண்டிப்பாக அவரது ஸ்டைல்தான் என்கிறார்.

அவர் நடப்பது முதல், உடல்மெழிகள் அனைத்தையும் அவர் உருவாக்கிக் கொண்டார். நாங்கள் நடிப்புப் பயிற்சி வகுப்பு முடிந்ததும் நன்றாக ஊர் சுற்றத்தான் நினைப்போம். ஒரே ஒருவர் ரஜினி மட்டும்தான் நாள் முழுக்க பயிற்சி வகுப்பிலேயே இருப்பார். எப்போது பார்த்தாலும் பல ஸ்டைல்களை பயிற்சித்துக் கொண்டே இருப்பார். அவர் ஸ்டைலாக நடப்பது கூட அவர் பயிற்சி செய்து வந்ததுதான். 

அவ்வளவு ஏன், சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடிக்கும் அந்த ஸ்டைலை அவர் பல மணி நேரங்கள் பயிற்சித்துள்ளார். நாங்கள் நண்பர்களுடன் எப்போது வெளியே சென்றாலும் அங்கே அவர் ஒரு சிகரெட்டை வாங்கி வைத்துக் கொண்டு அதனை தூக்கிப் போட்டு பிடித்துக் கொண்டேயிருப்பார்.  நாங்கள் இயற்கையாக நடிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டிருந்த போது, ஸ்டைலான நடிப்பை அவர் பயின்றுகொண்டிருந்தார்.

நான் அவருடன் பயிற்சி வகுப்பில் மட்டும் அல்ல சென்னையில் ஒரு விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தவர்களும் கூட என்கிறார்  ஜேம்ஸ்.

இந்த பயிற்சி வகுப்பின்போது, எங்களுக்கு ஆங்கிலம் மற்றும் பல மொழிப் படங்களைப் பார்க்க இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கப்படும். அதனைப் பார்த்து பார்த்து அந்த மொழிகளையும் நாங்கள் கற்றுக் கொள்வோம். ஒரு படம் பார்த்துவிட்டு மறுநாள் பயிற்சி வகுப்பில் படத்தைப் பற்றி பேச வேண்டும். அப்போதெல்லாம் ரஜினி தான் ஆங்கிலத்திலும் படத்தைப் பற்றியும் நடிகர்கள் பற்றியும் விரிவாகப் பேசி எங்களை எல்லோரையும் அசத்துவார்.

1975ஆம் ஆண்டு வின்சென்ட் தயாரித்த பிரியம் உள்ள சோஃபியா என்ற படத்தில் எனக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அது பற்றி அறிந்த ரஜினிகாந்த், நேராக ஜெமினி ஸ்டூடியோ வந்து என்னைப் பாராட்டிவிட்டுச் சென்றார். பிறகு தான் ரஜினிக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே ரஜினி மிக உயரத்துக்குச் சென்றார். அவருடன் படித்த எங்களுக்கு பெருமையாகவும் இருந்தது.

நான்கு ஆண்டுகளக்கு முன்பு, திரைப்பட பயிற்சி மையத்தில் முன்னாள் மாணவர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்த் வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் அப்போது துபையில் இருந்தார். அதனால் வரவில்லை. அது பற்றி அவர் நேராக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அறிவித்திருந்தார்.

ரஜினியின் நண்பர் ஜேம்ஸ், ஒரு தமிழ்ப் படம், 11 மலையாள படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்தை இயக்கியும் உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com