
சென்னை : தலைவா என்று அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
நாடு முழுவதுமிருந்து அவரது ரசிகர்களும் பல்வேறு தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
பல்வேறு திரைப்படங்களில் நடித்து, ஏராளமான ரசிகர்பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். பல ஆண்டு காலமாக சினிமா உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவரும் இவரே.
குழந்தைகள் முதல் பெயரிவர்கள் வரை இவருக்கு பல தரப்பு ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்புத் திறமை மற்றும் ஸ்டைல் காரணமாக இவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் அதிகரித்திருந்தனர். ஆனால், பிறகு அவரது எளிய தோற்றம், மனதில் இருப்பதை அப்படியே பேசுவது, வெளியில் நடிக்கத் தெரியாதது போன்றவற்றால், காலப்போக்கில் ரசிகர்கள் அதிகரித்துவிட்டனர்.
ஒரு பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, நடிகராகி, பேரும் புகழும் சம்பாதித்த, தமிழக மக்களின் மனதில் நீங்க இடம்பிடித்த சூப்பர் ஸ்டார் பற்றி பலரும் அறியாத சில தகவல்கள்..
பெங்களூருவில் மராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த். ஷிவாஜி ராவ் கெய்க்வாத் என்று இயற்பெயர் கொண்ட ரஜினிக்கு மராத்தியும் கன்னடமும் தெரியும். தனது குழந்தைக்கு மராத்தி மன்னர் சத்ரபதி சிவாஜியின் பெயரை அவரது தந்தை சூட்டியுள்ளார். வருங்காலத்தில் சூப்பர் ஸ்டார் ஆவார் என்பது அப்போதே அவருக்குத் தெரிந்துள்ளது.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, ரஜினி பல வேலைகளை செய்து வந்துள்ளார். கூலி வேலை, தச்சு வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார். பிறகுதான், பெங்களூரு போக்குவரத்துத் துறையில் நடத்துநராக வேலைக்குச் சேர்ந்தார்.
வில்லனாக..
ஆரம்பத்தில் ரஜினி சினிமா உலகில் வில்லனாகவே அறிமுகமானார். 1977ஆம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற திரைப்படத்தில்தான் நல்ல கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அமிதாப் பச்சான் நடித்து வெளியான தீவர், அமர் அக்பர் அந்தோணி, டான் உள்ளிட்ட சுமார் 11 படங்களின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவை அனைத்துமே சூப்பர் ஹிட் திரைப்படங்களான அமைந்தன.
இந்திய நடிகர்களிலேயே, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இடம்பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பேருந்து நடத்துநர் முதல் சூப்பர் ஸ்டார் வரை என ஒரு பாடமே இவரைப் பற்றி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் ஆறாம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சூப்பர் ரஜினிகாந்த் பற்றி ஒரு முழு பாடம் இடம்பெற்றுள்ளது.
அதில், ரஜினி எவ்வாறு நடத்துநராக இருந்து சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெறும் வரை உயர்ந்தார் என்பது குறித்தும், அவரது நண்பரும் பேருந்து ஓட்டுநராக இருந்தவருமான ராஜா பகதூர் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.