ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறும் சமயத்தில் அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்துக்குப் பிறகு ஆமிர் கான் நடிக்கும் படம் - லால் சிங் சத்தா. ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்பின் ரீமேக் இது.
இந்தப் படத்தில் ஆமிர் கானின் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இருவரும் இதற்கு முன்பு த்ரீ இடியட்ஸ், தலாஸ் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா. ஆகஸ்ட் 11 அன்று படம் வெளியாகிறது.
இந்நிலையில் மே 29 அன்று ஆமதாபாத்தில் ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. அன்றைய தினத்தில் லால் சிங் சத்தா படத்தின் டிரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளார் ஆமிர் கான். மே 29 அன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிச்சுற்றின் 2-வது இடைவேளையின்போது லால் சிங் சத்தா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் பல கோடி ரசிகர்கள் படத்தின் டிரெய்லரைக் காணும் வாய்ப்பு உருவாகவுள்ளது. ஒரு முக்கியமான விளையாட்டுப் போட்டி நடைபெறும் சமயத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிடுவது நல்ல விளம்பர உத்தியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என அறியப்படுகிறது.