''பிரேமம் இயக்குநர் சொன்ன கதையில் என் மகன் நடிக்க வேண்டும்...'': விஜய் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

பீஸ்ட் படம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். 
''பிரேமம் இயக்குநர் சொன்ன கதையில் என் மகன் நடிக்க வேண்டும்...'': விஜய் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

  சன் டிவியில் ஒளிபரப்பான 'பீஸ்ட் பட சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு, இயக்குநர் நெல்சனின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பீஸ்ட் குறித்து பேசிய நடிகர் விஜய், ''படம் வந்த பிறகு தான் தெரியும். என் படத்தைப் பத்தி நானே என்ன சொல்றது. சில படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். சில படங்கள் வெற்றிபெறாது. சில படம் கதையாக நன்றாக இருக்கும். படமாக சரியாக வராது'' என்றார்.

அனிருத் குறித்து நெல்சனின் கேள்விக்கு பதிலளித்த விஜய் அவர், ''இப்போ பீக்ல இருக்காரு. எனக்கு ஏதாவது ஒன்றை அனுப்பிக்கொண்டே இருக்காரு. அனிருத் கடின உழைப்பை கொடுக்கிறார். 

எனக்கும் கோபம் வரும். ஆனால் வெளிப்படுத்திக்கொள்ள மாட்டேன். நாம் எடுக்கின்ற பல முடிவுகள் கோபத்தில் எடுப்பது. பொறுமையா யோசித்து முடிவெடுங்கள். வாழ்க்கையை இலகுவாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டார். 

கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளித்ததாவது, ''எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது விநாயகர் கோவிலுக்கு சென்றேன். கத்தி படத்தின் படப்பிடிப்பின்போது தர்காவுக்கு சென்றேன். என் அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவர். இதனால் சிறிய வயதிலிருந்தே அப்படித்தான் என்றார். 

மகன் சஞ்சய் குறித்து கேள்விக்கு, ''அவருக்கு பிடித்ததை பண்ணட்டும். அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருமுறை 'பிரேமம்' பட இயக்குநர் வந்தார். எனக்குதான் கதை சொல்ல வந்தார் என நினைத்தேன். ஆனால் அவர் சஞ்சயிடம் கதை சொல்ல வேண்டும் என்றார். கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் சஞ்சய் அந்த கதையில் நடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர் முடிவெடுக்க நேரம் வேண்டும் என்றார். அவர் என்ன செய்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்று பதிலளித்தார். 

தளபதியிலிருந்து தலைவராக மாறவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா என நெல்சன் கேட்க, அதற்கு தளபதியா? தலைவனா? என்பதை ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com