
கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன், சி.மது ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் 13 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். கமல், ஷங்கரிடம் விசாரணை நடைபெற்றது. இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவுவதால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தியன் 2 படத்துக்கு ரூ. 150 கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், ரூ. 236 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. இயக்குநர் ஷங்கருக்கு ரூ. 40 கோடி சம்பளம் பேசிய நிலையில் இதுவரை ரூ. 14 கோடி கொடுத்துள்ளோம் என்று இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமலின் விக்ரம் படத்தின் வெற்றிக்கு அடுத்ததாக, இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவலை அளித்துள்ளார் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின். டான் படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசியதாவது:
பொன்னியின் செல்வன் தயாராகிவிட்டது. எப்போது பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். சொல்கிறேன் எனப் பதிலளித்துள்ளேன். சுபாஷ்கரன் சாருடன் நேற்றிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறேன். இதைச் சொல்லலாம் என நினைக்கிறேன். விரைவில் இந்தியன் 2 படத்தின் வேலைகளை ஆரம்பிக்கப் போகிறோம் என்றார்.
இதையடுத்து விக்ரமுக்கு அடுத்ததாக கமல் நடிப்பில் இந்தியன் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...