
படத்தை விளம்பரப்படுத்துவதில் புதிய முயற்சியாக தொலைக்காட்சி நெடுந்தொடரில் கதையின் ஒரு பகுதியாக வீட்ல விசேஷம் படத்தின் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
பதாய் ஹோ என்கிற ஹிந்தி படத்தின் ரீமேக்கை என்ஜே சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார் ஆர்ஜே பாலாஜி. தமிழில் இப்படத்தின் பெயர் - வீட்ல விசேஷம். 2018-ல் வெளியான பதாய் ஹோ படத்தில் ஆயுஷ்மண் குர்ரானா, நீனா குப்தா நடித்தார்கள். இயக்கம் - அமித் ரவீந்திரநாத் சர்மா. வசூல் ரீதியில் அசத்தியதோடு, இரு தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றது. 25 வயது கதாநாயகனின் அம்மா திடீரென ஒருநாள், தான் கர்ப்பமாக இருப்பதை அறிவார். வயதாகிவிட்டாலும் கருவை அழிக்கக்கூடாது என வயதான தம்பதியினர் குழந்தை பிறப்பதை எதிர்பார்ப்பார்கள். இதை அவர்களுடைய இரு மகன்களும் குடும்பத்தினரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.
ஆயுஷ்மண் குர்ரானா வேடத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். ஊர்வசி, சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் சில காட்சிகள் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளன. ஜூன் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
வீட்ல விசேஷம் படத்தைத் தொலைக்காட்சி வழியாக விளம்பரம் செய்வதில் புதிய உத்தியைப் படக்குழு கடைப்பிடித்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் புதுப்புது அர்த்தங்கள் நெடுந்தொடரில் வீட்ல விசேஷம் படத்தை விளம்பரம் செய்யும்விதமாக ஆர்ஜே பாலாஜியும் அபர்ணாவும் சில காட்சிகளில் நடித்துள்ளார்கள். அவர்கள் இடம்பெற்றுள்ள காட்சிகளும் வீட்ல விசேஷம் படத்தின் கதையைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக serial debut of @Aparnabala2 and myself in புது புது அர்த்தங்கள் for #VeetlaVishesham on @ZeeTamil..!!!#VeetlaVisheshamFromJune17 pic.twitter.com/dt8iudSH2H
— RJ Balaji (@RJ_Balaji) June 14, 2022
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...