இயக்குநர் செல்வராகவன் தற்போது தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் இயக்குநர் செல்வராகவனும் நடிக்கிறார். நானே வருவேன் படத்தில் இயக்குநர் செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தோற்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு நடிகர் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் அதுதான் பேரானந்தம் என தனுஷை குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஹிந்தி நடிகருடன் அரபிக் குத்து பாட்டுக்கு ராஷ்மிகா நடனம்
இந்தப் படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக செல்வராகவன் சமீபத்தில் அறிவித்திருந்தார். நானே வருவேன் படத்தில் நடிகை இந்துஜா நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக இருவரும் மயக்கம் என்ன படத்துக்காக இணைந்து பணிபுரிந்திருந்தனர்.