அனிருத் பிறந்த நாள்: உயரப் பறக்கும் இசைக்குருவி

90களில் ரஹ்மானிடம் தென்பட்ட வேகம், புதிய முயற்சிகள், தொடர் வெற்றிகள் அனிருத்தின் வளர்ச்சியைக் காணும்போது ஞாபகத்துக்கு வருகிறது.
படம் - twitter.com/anirudhofficial
படம் - twitter.com/anirudhofficial

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் - ஜெயிலர்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கானின் அடுத்த படம் - ஜவான்
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் - இந்தியன் 2
அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் நடிக்கும் படம்

இந்த அத்தனை படங்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை -  அனிருத் இசை. 

2022-ல் அனிருத் இசையமைப்பில் பீஸ்ட், நாய் சேகர் (ஒரு பாடல்), காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம் எனப் பல வெற்றிப் படங்கள் வெளிவந்துள்ளன. 

அனிருத் படப் பட்டியல்கள் நிஜமாகவே மிரட்டுகின்றன தானே!  தமிழ் சினிமா இந்த இளைஞன் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. இன்று தனது 32-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் அனிருத்.

2011-ல் 3 படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் அனிருத். கொலைவெறி பாடல் இந்தியா முழுக்கப் பிரபலமானது. முதல் படத்திலேயே பிரபலமான தமிழ் இசையமைப்பாளர்கள் பட்டியலில் இணைந்தார். மாஸ்டர் படப் பாடல் இந்தியாவெங்கும் பிரபலமானது. சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள் மாஸ்டர் பாடலுக்கு நடனமாடி அதன் விடியோக்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். 

வருடத்துக்கு அதிகபட்சமாக 3, 4 படங்களுக்கு மட்டுமே அனிருத் இசையமைத்து வருகிறார். படங்களின் எண்ணிக்கையை உயர்த்த அவர் எப்போதும் ஆசைப்படுதில்லை. வருடத்துக்கு ஒரு படம் என்றாலும் அந்தப் படத்துக்கு இசை பெருமளவு கைகொடுக்க வேண்டும் என்று மட்டும் எண்ணுகிறார். 2016, 2017 ஆண்டுகளில் தலா இரு தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ரெமோ, ரம், விவேகம், வேலைக்காரன். 2018-ல் தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா. 2019-ல் பேட்ட மற்றும் இரு தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தார். 2020-ல் தர்பார் மட்டும். 2021-ல் மாஸ்டர், டாக்டர் எனக் குறைவான படங்கள் மட்டுமே. சமீபகாலமாக இணையத் தொடர், சில படங்களுக்கு ஒரு பாடல் மட்டும் என பகுதி நேரப் பங்களிப்பையும் அளித்து வருகிறார். இதுதவிர பிரபல பாடகராகவும் இருக்கிறார். அனிருத் பாடினால் பாட்டு ஹிட்டு. கண்ணை மூடிச் சொல்லலாம். 

இப்படிப் பார்த்துப் பார்த்துப் படங்களை ஒப்புக்கொள்ளும் அனிருத், திடீரென பல பெரிய படங்களுக்கு இசையமைப்பது அவருக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகிறது.

2022 அனிருத்தை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம் என இசையமைத்த அத்தனை படங்களும் வெற்றி, அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். 90களில் ரஹ்மானிடம் தென்பட்ட வேகம், புதிய முயற்சிகள், தொடர் வெற்றிகள் அனிருத்தின் வளர்ச்சியைக் காணும்போது ஞாபகத்துக்கு வருகிறது. கையில் பிடிக்க முடியாத உயரம் சென்றார் ரஹ்மான். தற்போது அதே வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் அனிருத். 

மாஸ்டர் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பெற்றி பெற்றது பலரையும் அவர் பக்கம் இழுத்தது. வாத்தி கம்மிங் பாடலைத் தெரியாதவர்களே இந்தியாவில் இல்லை என்கிற அளவுக்கு புகழை அடைந்தார். அனிருத்தால் பாடல்களை ஹிட் ஆக்க முடியும், இளைஞர்களை ஈர்க்க முடியும் எனத் திரையுலகம் முழுமையாக நம்புவதால் தான் பெரிய நடிகர்களின் படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். பாடல்களின் காணொளிகளில் அதிகமாக நடிக்கவும் செய்கிறார் அனிருத். இதனால் அவருடைய முகம் அவருடைய இசை போல ரசிகர்களிடம் நன்கு கவனம் பெற்றுள்ளது. திரையுலகம் எதிர்பார்க்கிற துடிப்பு அனிருத்திடம் உள்ளது. 

பாடல்களின் வெற்றி, பெரிய பட வாய்ப்புகள் என்கிற அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளர் என்று அனிருத்தைத் தாராளமாக மதிப்பிடலாம். அனிருத் இசையமைக்கும் ஜெயிலர், ஜவான், இந்தியன் 2, அஜித் படம் என அத்தனை படங்களும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. 

உயரப் பறக்கும் இசைக்குருவி மேலும் பல அமர்க்களமான பாடல்களைத் தரவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனின் விருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com