இயக்குநர் சந்தீப்பின் விசிலால் உருவாகிய பின்னணி இசை: இசையமைப்பாளர் பகிர்ந்த சுவாரசிய விடியோ!
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் படம் ரூ. 862 கோடி வசூலித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான படமென விமர்சித்ததால் இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தினை கிளப்பியது. ஆனால் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர் சந்தீப் பிறந்தநாளுக்கு அவர் விசில் அடித்து உருவாக்கிய பின்னணி இசை விடியோவினை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனை படக்குழு பகிர்ந்துள்ளது.
ஹர்ஷ்வர்தன் ராமேஸ்வர் தமிழகத்தை சேர்ந்தவர். அர்ஜுன் ரெட்டி படத்தில் பின்னணி இசையமைத்து பிரபலமானவர். அனிமல் படத்துக்கும் அவர்தான் பின்னணி இசையமைத்துள்ளார். சில பாடல்களையும் இசையமைத்துள்ளார்.