ராக்கி பாயால் ஈர்க்கப்பட்டுள்ள மைக்கேல்: திரை விமர்சனம்

கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு ராக்கி பாய் எப்படி ஒரு அடையாளமாக மாறியதோ, அந்த வகையில் மைக்கேல் கதாபாத்திரமும் மாறும் என்ற நம்பிக்கையில் முயற்சிக்கப்பட்டுள்ளதுதான் இந்தப் படம்.
ராக்கி பாயால் ஈர்க்கப்பட்டுள்ள மைக்கேல்: திரை விமர்சனம்

சுதாய்ப் பாசத்தில் நம்மை மிஞ்சிவிடுவான்போலயே என கேஜிஎஃப்-இன் ராக்கி பாயே வாயைப் பிளக்கும் வகையில் கொதிப்பான ஒரு மகன் கதாபாத்திரத்தை (சின்ன பகவதி) உருவாக்குவதுதான் மைக்கேல் திரைப்படத்தின் முயற்சி. இந்த முயற்சி வெற்றி கண்டதா அல்லது முயற்சியாகவே தங்கிவிட்டதா?

மைக்கேல் (சந்தீப் கிஷன்), குருநாத் (கௌதம் வாசுதேவ்) இடையிலான கதைதான் மைக்கேல் திரைப்படம். 

குருநாத் மும்பையில் ஒரு முக்கியப் புள்ளி. சிறுவயதிலேயே குருநாத்திடம் சேரும் மைக்கேல், ஒருகட்டத்தில் குருநாத்தின் நம்பிக்கையாக மாறுகிறார். ஒரு காரியத்தை முடித்து வருமாறு மைக்கேலை தில்லிக்கு அனுப்புகிறார் குருநாத். தில்லி சென்ற மைக்கேல், குருநாத்தின் உத்தரவை முடித்துக்காட்டுகிறாரா இல்லையா? இதனால், ஏற்படும் விளைவுகள் என்ன? யார் இந்த மைக்கேல்? என்பதுதான் படத்தின் மீதமுள்ள திரைக்கதை. இதைப் படித்தவுடன் வேறு ஏதேனும் படங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது.

இந்தத் திரைக்கதை இன்டர்வெல்லில் ஒரு ட்விஸ்ட், க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட், க்ளைமாக்ஸுக்கு பிறகு 2-ம் பாகத்துக்கான விதை என கடைசி வரை நீடிக்கிறது.

கேஜிஎஃப் படத்தின் பாணியில் கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்பதை முதல் காட்சியிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது. முதல் 10 நிமிடங்களில் வரும் காட்சிகள், வசனங்கள் அனைத்தும் கேஜிஎஃப் திரைப்படத்தை உறுதியாக நினைவுபடுத்துகின்றன. உதாரணம் - படத்தின் மொத்த கதையை சொல்வதற்கென ஒரு கதாபாத்திரம், தாய்ப் பாசத்தில் சீரும் சிறுவன், தாய் - மகன் உறவில் வைராக்கியம் மற்றும் பல.

கேஜிஎஃப் ஒரு வெற்றி ஃபார்முலா என்றாலும்கூட, மைக்கேல் திரைக்கதையால் இதை சரியாகக் கையாள முடியவில்லை. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு படி முன்னதாக திரைக்கதை நகர வேண்டும். ஆனால், இந்த "ஆக்ஷன், பில்டப், ஸ்லோமோஷன்" ஃபார்முலாவால், திரைக்கதைக்கு ஒரு படி முன்னதாக ரசிகர்கள் பயணிக்கின்றனர்.

நடப்பதை வைத்தே அடுத்தது என்ன என்பதை ரசிகர்கள் யூகித்த பிறகும்கூட, அதற்கு நகராமல் அதே இடத்தில் ஸ்லோ மோஷனில் நீடிப்பது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால், கதையில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள்கூட உள்ளபடியான சுவாரஸ்ய உணர்வைத் தருவதற்குத் தடுமாறுகின்றன.

ஆனால், இவை எதுவும் பெரிதளவில் பாதிக்காதவாறு ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக், படத்தொகுப்பாளர் சத்யநாராயணன், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ஆகியோரை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. இதற்காக அவருக்குப் பாராட்டுகள்.

கிரண் கௌஷிக் கேமிராவில் படத்துக்கான அழகியலை சேர்த்துள்ளார். கதை சொல்லலில் படத்தொகுப்பாளர் தன்பங்குக்கு உதவியிருக்கிறார். அதேநேரம் இந்த இடத்தில் இந்தக் காட்சி தேவையில்லை என்கிற முடிவை சில இடங்களில் அவர் எடுத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

இவர்களில் சாம் சிஎஸ் டாப். ஓரிரு பின்னணி இசையைக் கொண்டு ஒப்பேற்றாமல், படம் முழுக்க பல இடங்களில் புதிது புதிதாக கொடுத்திருக்கிறார். 

நடிப்பைப் பொறுத்தவரை சந்தீப் கிஷன் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. அவரது பெரும் உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். ஆனால், திரைக்கதையில் கொடுக்கப்படக்கூடிய பில்டப் அளவுக்கு, இந்த பாத்திரத்தை அவரால் படம் நெடுக சுமந்து சொல்ல முடியவில்லையோ என்கிற எண்ணம் சில இடங்களில் எழுகிறது. இதற்கு திரைக்கதையும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லனாக கௌதம் அவரது வழக்கமான பாணியைத் தொடர்ந்திருக்கிறார்.

தெலுங்கில் அறிமுகமாயிருந்தாலும், தமிழுக்குப் புதிதான திவ்யன்ஷா கௌஷிக் கதைக்குத் தேவையான அளவுக்கு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற வாய்ப்புகளுக்கு மைக்கேல் படம் வழிவகுக்கலாம். 

குருநாத்தின் மகனாக வரும் அமர்நாத் கதாபாத்திரத்தில் நடிகர் வருண் சந்தேஷ் நடித்திருக்கிறார். சம்பந்தப்பட்ட காட்சிக்குத் தேவையான உணர்வைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். கேஜிஎஃப் படத்தில் நாம் பார்த்த நடிகர் ஐயப்பா இந்தப் படத்திலும் அதே மாதிரியான தோற்றத்தில் வந்து அதே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி சென்றிருக்கிறார்.

கதாபாத்திரத்துக்கு அவ்வளவு வலுவில்லாதபோதும், சிறப்புத் தோற்றமாக ஏற்று நடித்திருக்கின்றனர் விஜய் சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார். விஜய் சேதுபதி அவரது வழக்கமான அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேநேரம், சிறிய பாத்திரம் என்றாலும் அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் வரலக்ஷ்மி சரத்குமார்.

கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு ராக்கி பாய் எப்படி ஒரு அடையாளமாக மாறியதோ, அந்த வகையில் மைக்கேல் கதாபாத்திரமும் மாறும் என்ற நம்பிக்கையில் முயற்சிக்கப்பட்டுள்ளதுதான் இந்தப் படம். ஆனால், இது முயற்சியாகவே தங்கிவிடுகிறது என்பது மட்டும்தான் பின்னடைவு. மற்றபடி படக்குழுவின் நோக்கம் மற்றும் உழைப்பைப் பொறுத்தவரை எந்தக் குறையும் இல்லை. 

மேற்குறிப்பிட்ட குறைகளைத் தாண்டி காட்சி அழகியல், நல்ல பின்னணி இசையில் ஒரு திரை அனுபவத்தைப் பெற விரும்பினால், திரையரங்கு செல்ல மைக்கேல் நல்ல தேர்வாக அமையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com