‘அயலி’ இணையத் தொடர் விமர்சனம்: நிறைகளும் குறைகளும்!

ஓர் இணையத் தொடருக்கான கதை, திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்கிற வித்தையைக் கற்றுக்கொண்ட இயக்குநர்..
‘அயலி’ இணையத் தொடர் விமர்சனம்: நிறைகளும் குறைகளும்!

ஓர் இணையத் தொடருக்கான கதை, திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்கிற வித்தையைக் கற்றுக்கொண்ட இயக்குநர் என்று அயலியை இயக்கிய முத்துகுமாரைப் பாராட்டலாம். கொலை, கொள்ளை, த்ரில்லர் என்று ஒரே வடையைச் சுட்டுக்கொண்டிருந்த தமிழ்ப் படங்களுக்கு மத்தியில் புத்தம் புதிய புரட்சிப்பூ, அயலி. 

டிரெய்லரிலேயே முழுக்கதையும் தெரிந்துவிட்டது. ஓர் இளம் பெண், வயதுக்கு வந்ததை எவ்வளவு தூரம் மறைத்து, ஊர்க் கட்டுப்பாடுகளையும் மூட நம்பிக்கைகளையும் எப்படித் தகர்க்கிறார் என்பது எட்டுப் பாகங்களாக விரிவடைந்துள்ளது.

தமிழ்ப் படங்களில் கதையை விடவும் கருத்துகளைச் சொல்லவே எல்லா இயக்குநர்களுக்கும் பிடித்திருக்கிறது. ஆனால், நல்ல கருத்துகளை ஒரு கதையுடன் எப்படிச் சொல்ல வேண்டும் என்று திரையுலகினருக்குப் பாடம் எடுத்தது போல இருக்கிறது அயலி. இயக்குநருக்கு வசமாக அமைந்த சினிமா கிராமம் என்பதால் தன் கொள்கைகளை வெளிப்படுத்தும் கதை, திரைக்கதையை அழகாகப் பின்னியிருக்கிறார் முத்துகுமார். நம் அம்மாக்கள், நம் பாட்டிகளுக்கு நேர்ந்த வாழ்க்கையை இணைத்துவைத்துப் பார்த்துத்தான் கதையுடன் பயணிக்க முடிகிறது. 

அயலி என்கிற தெய்வத்தை முன்வைத்து ஊரில் பெண்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் வயதுக்கு வந்த காரணத்தால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத மாணவிகளின் அவலத்தையும் மனத்தில் நன்குப் பதியும்படி காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பு, தெய்வக்குத்தம், கலாசாரம், பாரம்பரியம், ஊர்க் கட்டுப்பாடு, இனப் பெருமை போன்ற பலவிதமான காரணங்களைக் கொண்டு ஆண்கள் கிழிக்கும் கோடுகள், வீரபண்ணை கிராமத்துப் பெண்களின் முன்னேற்றத்தை கனவுகளையும் அடியோடு சிதைத்து விடுகிறது. இந்தச் சங்கிலியை உடைக்க வழி தெரியாமல் இளம் பெண்கள் தவிப்பதும் அக்கட்டுப்பாடுகளை அவர்களுடைய அம்மாக்கள் ஒருகட்டத்தில் ஏற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு தங்கள் மகள்களைத் தயார்ப்படுத்துவதும் போன்ற பெண்ணிய உணர்வுகளைக் கொண்டு ஒரு கதை உருவாக்குவதும் அதைச் சுவாரசியமாகச் சொல்வதும் அவ்வளவு எளிதல்ல. ஆனால் அயலி இந்த விஷயத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. 

ஒளிப்பதிவு ராம்ஜி என்பதால் படத்தின் காட்சிகளில் தானாகவே ஒரு தரம் அமைந்துவிடுகிறது. ரேவாவின் இசை, சீரான வேகத்தில் செல்லும் காட்சிகளைத் தந்த படத்தொகுப்பு (கணேஷ் சிவா) எனச் சரியாக அமைந்த குழுவினர் அயலியின் இன்னொரு பலம். ஊரின் புரட்சிப் பெண்ணாக தமிழ் செல்வி கதாபாத்திரத்தில் அபி நட்சத்திரா, அவருடைய அம்மாவாக அனுமோல், அப்பாவாக அருவி மதன், ஊருக்குத் தலைமை தாங்கும் சிங்கம்புலி எனத் தேர்ந்த நடிகர்களின் இயல்பான நடிப்பால் அப்படியே கதைக்குள் சென்று விடுகிறோம். அபி நட்சத்திராவுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரம். ஊர் மக்களைப் பற்றிய அவருடைய எண்ணங்களும் படிப்புக்காக அவர் முன்னெடுக்கும் விஷயங்களும் ஒரு பிற்போக்குச் சமூகத்தைப் பெண்கள் எப்படித் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம். வயதுக்கு வந்ததால் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திருமணத்தை எதிர்கொள்ளும் இளம் பெண்கள் கேட்கும் கேள்விகளும் சிதைந்து போன தங்களுடைய சிறுவயதுக் கனவுகளினால் மகள்களுக்காகப் பெண்ணுரிமையைப் பேசும் அம்மாக்களும் படத்தில் அழகான தருணங்களை உருவாக்குகிறார்கள். கட்டுப்பாடுகளால் பத்தாம் வகுப்பு அறைக்குள் நுழைந்திராத ஊர்ப் பெண்கள் தங்களுடைய போராட்டத்தின் பலனால் அதற்குள் நுழைகிறபோது ஏற்படும் உணர்வெழுச்சியை என்னவென்று சொல்வது?! 

புதுக்கோட்டையில் உள்ள பின்தங்கிய கிராமமான வீரபண்ணையில் கதை நடக்கிறது. ஆனால் படத்தில் வட்டார வழக்கே இல்லை. எல்லோரும் பொதுத்தமிழில் பேசுகிறார்கள். மேலும் வயதுக்கு வந்த பள்ளி மாணவிகளை மேலும் படிக்க விடாமல் உடனடியாகத் திருமணம் செய்துவைப்பதே பெரிய அவலம் எனும்போது அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் அவ்வளவு விரிவாகக் காட்டியிருக்க வேண்டுமா? அதிலும் லவ்லின் படும் கஷ்டங்களெல்லாம் அதீதம். வயதுக்கு வந்தவுடன் திருமணமான லவ்லினுக்குக் குடிகாரப் புருஷன், அவன் ஒரு வாரிசைக் கொடுத்துவிட்டு இறந்துபோவது, அவனுடைய இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் என துலாபாரக் காட்சிகளின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். கதைக்குத் தொடர்பில்லாத சில காட்சிகளும் உண்டு. வன்மம் கொண்ட பள்ளி ஆசிரியர் வேடத்தில் அசத்தியிருக்கிறார் டிஎஸ்ஆர்.  ஆனால், தன் மகளின் ஆசிரியரான அவரை மரியாதைக் குறைவாகவே நடத்துகிறார்கள் தமிழ்செல்வியின் பெற்றோர். நிஜத்தில் இது சாத்தியமேயில்லையே! அதேபோல ஆரம்ப பாகங்களில் டப்பிங்கில் சில குறைகள் உள்ளன. வசனங்களுக்கும் உதட்டசைவுக்கும் பொருத்தம் இல்லை. கிராமத்தில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரே விதிமுறை, ஒரே கட்டுப்பாடு தான். ஆனால் நகரத்தில் வைத்து கிராமத்து ஆண்கள் கூடும் மாநாட்டில், நம் இனத்தின் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் வசனங்கள் வருகின்றன. இனம் என்றால் தமிழ் இனமா அல்லது சாதியைக் குறிப்பிடுகிறார்களா? ஊர் முழுக்க ஒரே சாதி மக்களா?   

பத்தாவது வகுப்பில் தேர்ச்சி பெறாத ஆண்கள், பத்தாவதே படிக்காத பெண்கள் என்று இருக்கிற ஒரு கிராமத்தில் வயதுக்கு வந்ததை மறைத்து ஆண்களின் எதிர்ப்பையும் மீறி வெளியூருக்குச் சென்று தேர்வு எழுதி, பத்தாம் வகுப்புத் தேர்வில் மாவட்டத்திலேயே முதலிடம் பெறுகிறார் தமிழ்செல்வி. இதற்காக மாவட்ட ஆட்சியரே ஊருக்கு வந்து பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். அந்தப் பாராட்டு விழா காட்சி, பலருக்கும் கனவு விதைக்கும் அளவுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. ஆனால், அந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்திருந்தும் எந்த ஓர் அரசு அதிகாரியோ மக்கள் பிரதிநிதியோ அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் கேள்வி எழுகிறது. ஆனால் அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் அதற்காகச் சிறை சென்று அதையும் ஆண்கள் பெருமையாக எண்ணுவார்கள் என்று சொல்லப்படும் வசனம் அபாரம் முத்துகுமார். வயதுக்கு வந்த பெண்கள் அயலி கோயிலுக்குச் செல்லக்கூடாது என்கிற விதிமுறையை உடைத்து தமிழ்செல்வியின் வருங்காலத்துக்காக அத்தனை பெண்களும் கோயிலுக்குள் அமர்ந்து போராட்டம் நடத்துவது படத்தின் உணர்ச்சிகரமான காட்சி. ஆனால் பெண்களின் சவாலை உடைக்க, அவர்களுக்குப் பாடம் புகட்ட, ஆண்கள் நிகழ்த்தும் ஒரு சம்பவம் சரியான முடிவாகத் தெரியவில்லை. தொடரின் முக்கால்வாசி வரை காட்சிகளில் இருந்த ஓர் ஒழுங்கு, கடைசிக்காட்சிகளில் தறிகெட்டுப் போவது போல தோன்றுகிறது. அந்த இடங்களில் இன்னும் நிதானமான, புத்திசாலித்தனமான திரைக்கதை தேவைப்படுகிறது. (நான்கு மணி நேரம் நீளும் இந்த இணையத் தொடரை மூன்று மணி நேரப் படமாக எடுத்திருந்தால் இன்னும் பலரிடம் பெண்ணியக் கருத்துகளைக் கொண்டு போய்ச் சேர்த்திருக்க முடியும். நிறைய விருதுகளும் கிடைத்திருக்கும்.) 

பெண் கல்வி, பெண் சுதந்திரம், பெண்ணியம் என்று நாம் எவ்வளவு பேசினாலும் எழுதினாலும் ஒரு திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்பு பல புதிய வழிகளை உருவாக்கும். கதை 1990-ல் நடந்தாலும் சமகால நிலவரத்துடன் ஒப்பிட்டபடியே தான் தொடரைப் பார்க்க முடிகிறது. தொடரைப் பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் பல்வேறு விதமான அலைகளை, உரையாடல்களை அயலி நிச்சயம் ஏற்படுத்தும். தமிழ்செல்வி கடைசியில் என்ன ஆனார் என்று காண்பிக்காதது ஏமாற்றமே. (ஆனால் கிராமத்தின் சூழல் மாறியிருக்கிறது.) அயலியின் கடைசி வசனத்தால், கதை இன்னும் மிச்சமிருக்கிறது, தமிழ்செல்வியின் போராட்டம் ஓயாது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அயலிக்கு முடிவு இருக்கக்கூடாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com