‘விஜய் நன்றாக உடை அணிந்திருக்கலாம்’- அறிவுரை வழங்கிய இசையமைப்பாளர்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் இன்னும் சிறப்பாக உடை உடுத்தியிருக்கலாம் என இசையமைப்பாளர் கூறியது சர்ச்சையாகி வருகிறது. 
‘விஜய் நன்றாக உடை அணிந்திருக்கலாம்’- அறிவுரை வழங்கிய இசையமைப்பாளர்

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் ரஞ்சிதமே 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 30 மில்லியன் (3 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இசை வெளியீட்டு விழா இன்று (2022, டிசம்பர் 24) அன்று நடைபெற்றது. இதனை சன் தொலைக்காட்சி நேற்று (2023, ஜன.1) ஒளிபரப்பியது. இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. விஜய்யின் உடை நன்றாக இருந்ததென பலரும் கூறிய வகையில் இவர் மாறுப்பட்ட கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: 

'வாரிசு' பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது. அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள்.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே. 

ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லை. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com