சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நாயகியாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ்!

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சில படங்களில் தன் முகத்தைப் பதிவு செய்திருந்தாலும் நாயகியாக மோகன் லாலுடன் நடித்த ‘கீதாஞ்சலி’ திரைப்படமே அவருக்கான நல்ல அறிமுகமாக இருந்தது. இதேநாளில் (நவ.14) 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. 

அதன்பின், கீர்த்தி தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தத் துவங்கினார். 2015-ல் இது என்ன மாயம் படத்தில் தமிழில் நாயகியாக அறிமுகமான கீர்த்திக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது ரஜினி முருகன் திரைப்படம்தான். அதன்பின், தொடரி, ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாமன்னன் வரை 30 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். அடுத்ததாக, இவர் நடிப்பில் உருவான ‘சைரன்’, ’ரகு தாதா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கன்னிவெடி’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன.

மேலும், அட்லி தயாரிப்பில் ஹிந்தி ரீமேக்கான ‘தெறி’ படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அழகை மட்டுமே நம்பி சினிமாவில் காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்ததால்தான் நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுக்கிறார் கீர்த்தி. அப்படி, அவர் நாயகியாக நடித்த மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி (நடிகையர் திலகம்) படமே கீர்த்தியின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. மேலும், தனக்கான மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது, 10 வயது குழந்தைக்கு தாயாக சாணிக்காயிதம் படத்திலும் நடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்.

நடிப்பு மட்டுமின்றி நன்றாக நடனமாடக்கூடியவர் என்கிற பாராட்டுக்களையும் பெற்றவர். குறிப்பாக, மகேஷ் பாபுவின் சர்க்கார் வாரி பட்டா படத்தில் இடம்பெற்ற ‘மா மா மகேஷா’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்ததுக்கு கீர்த்தியின் நடனமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் கீர்த்தி சுரேஷ்க்கு பாலிவுட் கதவுகளும் தயாராக இருக்கின்றன.

நல்ல நடிப்பாற்றலும் அழகும் கொண்ட குறிப்பிடத்தக்க நாயகிகளில் கீர்த்திக்கு இன்று முக்கியமான இடம் உண்டு. கீதாஞ்சலியில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நாயகியாக தன் சினிமா வாழ்வில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com