டைட்டானிக்கை தொடர்ந்து திரைப்படமாகும் டைட்டன் நீர்மூழ்கி விபத்து!

டைட்டானிக் கப்பல் விபத்து சம்பவத்தை வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டது போலவே டைட்டன் நீர்மூழ்கி விபத்து சம்பவத்தை வைத்து படமெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
டைட்டன் நீா்மூழ்கி
டைட்டன் நீா்மூழ்கி

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கப்பல் விபத்துடன், காதல் கதையை இணைத்து ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த டைட்டானிக் படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது.

1912-ஆம் ஆண்டு கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 2023-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலும் கடந்த ஜூன் மாதம் விபத்தில் கடலுக்குள் மூழ்கியது.

அதையடுத்து டைட்டானிக் போலவே, டைட்டன் விபத்தை வைத்தும் ஜேம்ஸ் கேமரூன் படமெடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை ஜேம்ஸ் கேமரூன் மறுத்தார்.

இந்நிலையில், மைண்ட் ரியாட் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் டைட்டன் நீர்மூழ்கி விபத்து சம்பவத்தை வைத்து படமெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. சால்வேஜ்ட் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா நோக்கி கடந்த 1912-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், வழியில் இருந்த பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கியதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

கடலுக்குள் மூழ்கிய அந்தக் கப்பல், அமெரிக்காவின் நியூஃபெளண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவில் கடலடியில் உடைந்து கிடப்பது கடந்த 1985-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியார் நிறுவனம் நீர்மூழ்கி ஒன்றை வடிமைத்தது.

பிரிட்டன் தொழிலதிபர் ஹமீஷ் ஹார்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், நீர்மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபர் ஷேஸ்தா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேருடன் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் கடந்த ஜூன் மாதம் கடலில் இறங்கியது.

சுமார் 4 கி.மீ. ஆழத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த நீர்மூழ்கிக்கும் போலார் பிரின்ஸ் கப்பலுக்கும் இடையே இருந்த தகவல் தொடர்பு சுமார் 1 மணி நேரம் 45 நிமிஷத்துக்குப் பிறகு துண்டிக்கப்பட்டது.

அட்லாண்டிக் பெருங்கடலின் மிக அதிகமான அழுத்தத்தால் டைட்டன் நீர்மூழ்கி கடலுக்குள்ளேயே வெடித்து, அதில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தது சில நாட்களுக்கு பிறகே உலகுக்கு தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com