இருக்கை நுனி திரில்லர்.. கருடன் - திரை விமர்சனம்!

சுரேஷ் கோபி நடிப்பில் மலையாளத்தில் வெளியான கருடன் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இருக்கை நுனி திரில்லர்.. கருடன் - திரை விமர்சனம்!

நடிகர்கள் சுரேஷ் கோபி, பிஜு மேனன், தலைவாசல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது கருடன் திரைப்படம்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த மாணவி ஒருவர் மழை இரவில், தன் வீட்டிற்கு சென்றுகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டு புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் கட்டடம் ஒன்றில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். அப்பகுதி முழுக்க இருளாக இருந்தாலும் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், மின்னல் வெளிச்சத்தில் இந்தக் குற்றத்தை செய்த நபரின் முகத்தைப் பார்த்து விடுகிறார். ஆனால், குற்றவாளி தப்பிச்செல்ல பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மருத்துமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர் சில நாள்களில் கோமா நிலைக்குச் செல்ல, வழக்கு விசாரணை தீவிரமாகிறது. 

காவல்துறையிடம், தான் அந்தக் குற்றவாளியின் முகத்தைப் பார்த்ததாகச் சொல்லும் கட்டட ஊழியர் சம்பவம் நிகழ்ந்த அன்று, குடிபோதையில் இருந்ததையும் ஒப்புக்கொள்கிறார். வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ஹரிஷ் (சுரேஷ் கோபி) பத்திரிகையாளர்களிடம் மது அருந்தியிருந்தது குறித்து எதுவும் பேசக்கூடாது என்றும் அப்படி பேசினால் இந்த வழக்கில் நீயும் சிக்கிக்கொள்ள நேரிடும் என அறிவுரை வழங்குகிறார். அதை ஒப்புக்கொண்ட அந்த ஊழியர், அடுத்தக்கட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தந்து குற்றவாளியின் முகத்தை அடையாளம் காண்கிறார். 

வழக்கை தீவிரமாகக் கையில் எடுக்கும் ஹரிஷ், அப்பெண் பயின்று வந்த கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் நிஷாந்த்தான் (பிஜு மேனன்) இக்குற்றத்தைச் செய்தவர் என கண்டுபிடிக்கிறார். காரணம், ஆதாரங்கள் அனைத்தும் நிஷாந்துக்கு எதிராக இருக்கின்றன.  வழக்கை விசாரித்த நீதிபதி மிகக் கச்சிதமான ஆதாரங்களைக் கண்டு நிஷாந்துக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறார். ஆனால், தான் இக்குற்றத்தைச் செய்யவில்லை என சிறையில் தவிக்கும் நிஷாந்த் தன் குடும்பத்தில், சமூகத்தில் தன்னை யாரும் நம்பவில்லையே என மனவேதனை அடைகிறார். பின், ஹரிஷ் அடுத்தடுத்த வழக்குகளில் கவனத்தை செலுத்துகிறார்.

தொடர்ந்து, சிறையில் 7 ஆண்டுகளைக் கழித்து தன்னுடைய அடையாளங்களை இழக்கும் நிஷாந்த், விடுதலை ஆகி ஊருக்குள் வருகிறார். ஆனால், மனைவியும் உறவினர்களும் அவரை ஏற்க மறுக்கின்றனர். வாழ்க்கைக்கு இனி அர்த்தமில்லை எனத் தவிப்பவர் தன்னுடைய வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். குற்றத்திற்காக சிறை தண்டனையை அனுபவித்துவிட்டு வந்தவர், ஏன் தன் வழக்கை திரும்ப நடத்துகிறார் என ஹரிஷ் உள்பட இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குழம்புகின்றனர். நீதிபதி வழக்கை எடுத்துக் கொள்கிறார். வழக்கறிஞராக தன் வழக்கைத் தானே நடத்துவதாக நிஷாந்த் அறிவிக்கிறார். முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கு மீண்டும் சூட்டைக் கிளப்புகிறது. நிஷாந்த் ஏழு ஆண்டுகளாக சிறையில் என்ன செய்து கொண்டிருந்தார்?  இந்தக் குற்றத்தை செய்தது யார்? என்கிற  பதற்றத்தை ஏற்படுத்தும் கேள்விகளுக்கு பரபரப்பான திரைக்கதையில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அருண் வர்மா.

இது நாம் அன்றாடம் கடந்து வரும் குற்ற வழக்கு. ஆனால், காவல்துறையின் பங்களிப்பும் நீதித்துறையின் ஈடுபாடும் எந்த அளவிற்குக் குற்றவாளிகளை நெருங்கிச் செல்கிறது என்பதை அட்டகாசமாக திரைக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குநர். சின்ன சின்ன தகவல்களும் ஆதாரங்களும் ஒரு வழக்கின் திசையை எப்படியெல்லாம் மாற்றக் கூடியவை என்பதை சிறப்பான திரைக்கதை மூலம் ஒரு நல்ல சினிமாவை படக்குழு உருவாக்கியிருக்கிறார்கள்.

திறமைவாய்ந்த ஹரிஷும், நிஷாந்துமாக நடிகர்கள் சுரேஷ் கோபியும் பிஜு மேனனும் அசத்தியிருக்கிறார்கள். முதல்பாதியின் சாதாரண கதாபாத்திரங்கள் இரண்டாம் பாதியில் ஆணவத்தால் முட்டிக்கொள்ளும் நாயகர்களாக கச்சிதமாக திரைக்கு ஒன்றியிருக்கிறார்கள். குறிப்பாக, பிஜு மேனனின் கிளைமேக்ஸ் காட்சி நடிப்பு அபாரம். அதேபோல், சுரேஷ் கோபிக்கும் நீண்ட நாள் கழித்து ஒரு வெற்றிப்படம் அமைந்திருக்கிறது. காவல்துறை அதிகாரியாகவும் தன் குடும்பத்தைப் பாதுகாக்கும் தந்தையாகவும் நம்மைக் கவர்கிறார். வழக்கறிஞராக நடித்த நடிகர் சித்திக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையான தலைவாசல் விஜய்யும் தேவையான நடிப்பை வழங்கி கதைக்கு உயிரோட்டத்தை அளித்திருக்கிறார்கள். நடிகை அபிராமிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் படமாக இது இருக்கும்.

கிரைம் பாணிக்கென உரித்தான ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் பாராட்டுக்குறியவை. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் நம் கவனத்தை சிதைக்காமல் பார்த்துக்கொள்கிறது. நீதிமன்றத்தில் நடைபெறும் காட்சிகளில் கலை இயக்குநரின் பங்கு சிறப்பாக இருக்கிறது.

ஜினேஷின் கதையும் மிதும் மானுவல் தாமஸின் திரைக்கதையுமே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவை. சமரசம் இல்லாமல் கதையை மட்டுமே நம்பி படத்தை இயக்கியிருக்கும் உழைப்பு தெரிகிறது.

படத்தின் திரைக்கதை வேகத்தைக் குறைக்காத தேவையற்ற காட்சிகள், பாடல்கள் எதையும் உள்ளே புகுத்தவில்லை. படம் துவங்கிய 15வது நிமிடத்தில் ஆரம்பிக்கும் கதை இறுதிவரை பரபரப்பாகவே செல்கிறது. ஆனால், குற்றவாளிகளின் சிறை உலகம் பற்றிய சில காட்சிகள் அதீதமாகக் காட்டப்பட்டதாகத் தோன்றுகிறது. முக்கியமாக, நிஷாந்த் வழக்கை மறுவிசாரணைக்குக் கொண்டு வரும்போது ஹரிஷ் காவல்துறையிலிருந்து ஓய்வு பெறுகிறார். இருப்பினும், இந்த வழக்கிற்காக அவரால் உருவாகும் குழப்பங்களுக்குக் காவல்துறை உடனிருக்கிறது. ஆனால்,  இவையெல்லாம் கமர்சியல் தனங்களாகவும் வைக்கப்படவில்லை என்பதால் கதையை சிதைக்கவும் இல்லை.

குற்றங்களும் அதன் பின்னணியையும் விரும்பும் ரசிகர்களை கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும் படமாகவே உருவாகியிருக்கிறது கருடன்.. மலையாளத்தில் சமீப காலமாக சின்ன பட்ஜெட் படங்களும் வசூலைக் குவித்து வருகின்றன. ரோமாஞ்சம், 2018, கண்ணூர் ஸ்குவாட் ஆகிய படங்கள் செய்த வசூல் சாதனையை கருடனும் செய்யும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com