மொட்டுகள் மலரட்டும்

மொட்டுகள் மலரட்டும்

ராம், திரைச்சீலையை விலக்கினான். ஐரோப்பாவின் அந்த அழகிய புறநகர்ப் பகுதியில் இன்னும் பனிப்பொழிவு தொடர்ந்து கொண்டிருந்தது.
Published on

ராம், திரைச்சீலையை விலக்கினான். ஐரோப்பாவின் அந்த அழகிய புறநகர்ப் பகுதியில் இன்னும் பனிப்பொழிவு தொடர்ந்து கொண்டிருந்தது. இருள், பிரிய மனம் இல்லாமல் காதலுடன் தொலைவிலிருந்த பனிமலைகளை அணைத்துக் கொண்டிருந்தது. குளிர்காலத்தில் காலை 8.30 மணி வாக்கில்தான் சற்று வெளிச்சம் தலைகாட்டும். மீண்டும் மாலை 4.30 மணிக்கே இருட்டத் துவங்கிவிடும்.

ஜன்னல் வழியே பார்த்தான். மூன்று பள்ளிக் குழந்தைகள், ஸ்கூல் பஸ்ஸூக்காக காத்திருந்தார்கள். இப்படி இருட்டில் கிளம்பி, மாலை இருட்டிலேயே திரும்பி வருவார்கள்.

காத்திருக்கும் நேரம், ஒருவர் மீது ஒருவர் பனித்துகள்களை வீசுவதும், உருட்டி 'ஸ்னோமேன்' செய்து விளையாடுவதுமாகவும் இருந்தார்கள். எந்த நாடாக இருந்தாலும், குழந்தைகள் என்றாலே குதூகலம்தானே!

விலகியிருந்த பெட்ரூம் கதவு வழியே அவன் கண்கள் சென்றன.

மேகா, ஓவியமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். மைக்ரோஓவனில் சூடாக்கிய பாலை, இன்ஸ்டன்ட் காஃபியுடன் கலந்து, ஹால் சோஃபாவில் அமர்ந்து, சுவரில் வியாபித்திருந்த டி.வி.யை முடுக்கினான். கருந்திரை பிரகாசித்தது.

நாட்டின் பிரதமர் நேற்று விடுத்த செய்தி, மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

'கடந்த 25 வருடங்களாக இந்த நாட்டின் குழந்தைப் பிறப்பு விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவது பெரும் கவலை அளிக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக, ஒரு பெற்றோருக்கு இரண்டு குழந்தைகள் என்பது படிப்படியாகக் குறைந்து, தற்பொழுது 0.7 என்கிற விகிதத்தைத் தொட்டுவிட்டது. அதாவது பாதிக்கு மேல் பெற்றோர் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. மீதிப்பேர், ஒரு குழந்தையுடன் நிறுத்தி விடுகிறார்கள். இப்படியே தொடர்ந்தால், நான்காவது தலைமுறை வருவதற்குள் இனமே அழிந்து போகும் என்கிற அபாயம்.'

'வால்யூமைக் குறைக்கிறாயா? தலைவலிக்குது' என்றாள் மேகா, படுக்கையிலிருந்து விலகாமல்.

'எனக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்... நீ சாப்பிட்டுவிட்டு இடத்தைக் காலி பண்ணு' என்று ரஜாயை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.

ராம், இந்த ஐரோப்பிய நாட்டுக்கு வேலை நிமித்தமாகத்தான் வந்தான். இங்கேயே பிறந்து, வளர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகாவை, ஒரு செமினாரில் சந்தித்தான். தொடர்ந்து, டெளன்டவுன், ஹைஸ்ட்ரீட், இந்தியன் ரெஸ்டாரண்ட் என்று கண்ணில் பட்ட நட்பு, காதலாகிக் கசிந்து கல்யாணத்தில் முடிந்தது. ராம் குடியுரிமை பெற்று, இந்த நாட்டில் தொடர்ந்தான்.

மருத்துவரான மேகாவின் அப்பா, ஆரம்ப காலத்தில் வேலூரிலிருந்து இங்கு வந்து குடியேறியவர். மேகாவைப் பொருத்தவரை, இந்த நாட்டின் ஒவ்வொரு தனிமமும் அவளுள் இருந்தது.

'குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லை' என்று மேகா, காதலிக்கும்பொழுது சொன்னதை, அவன் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், சமீபகாலங்களில், குழந்தைகளைப் பார்க்கும்பொழுது, ஓர் இனம் புரியாத ஏக்கம், அவன் மனதில் அலைமோத ஆரம்பித்தது.

சமீபத்தில், அவன் அலுவலகத்துக்கு நான்காம் கிரேடு படிக்கும் பள்ளிக் குழந்தைகள், செயற்கை நுண்ணறிவு மாற்றங்களைப் பற்றி அறிந்துகொள்ள வந்தபொழுது, கிடைத்த உற்சாகமும், வியப்பும், அனுபவமும், வாழ்க்கையில் குழந்தைகளுடன் இருப்பது எவ்வளவு பெரிய வரம் என்பது தெரிந்தது.

'குழந்தை' ஆசையை மெதுவாக, மேகாவிடம் சொன்னபோது, இடக்கையினால் புறந்தள்ளினாள்.

'ராம், நான் வாழ்க்கையை அணு அணுவாக அனுபவிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாட்டிலும், எனது காலடிகள் பதிக்க வேண்டும். உலகின் உயர பனிமலைகளில் அலறியபடி ஐஸ் ஸ்கேட்டிங் செய்தவாறு கீழிறங்க வேண்டும். கூந்தல் பறக்க, ஸ்பீட் போட்டில், கடல்களை அலச வேண்டும். இப்படி என் விஷ்லிஸ்ட் மிகப் பெரியது. குழந்தை, என்னுடைய 20 வருட வாழ்க்கையை 'லாக்' செய்துவிடும். இந்த நாட்டில் இளைஞர்களும், யுவதிகளும் சந்தோஷமாக, அவரவர் விருப்பப்படி என்னவெல்லாம் செய்கிறார்கள், பார்த்தாயா? நீ மாய வலைக்குள் என்னைச் சிக்க வைக்கப் பார்க்கிறாய். நீ வேணுமானால் ஸ்கூல் டீச்சர் ஆகிவிடு. இப்போது என்னை விடு' என்றபடி, அகன்றாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பக்கத்து வீட்டில் இருக்கும் ஜப்பானிய தம்பதியரைப் பார்க்கச் சென்றான் ராம். அரசாங்கத்தின் உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அகிராவையும், அவரது மனைவி முன்னாள் பொருளாதார பேராசிரியை இசுமியையும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். வாரிசு இல்லாத அந்தத் தம்பதியை, ஒவ்வொரு ஞாயிறு மாலையும் சந்தித்து, குறைந்தபட்சம் ஒருமணி நேரம் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

'இந்த வார இறுதியில் வயதான தம்பதியுடன் டீ சாப்பிட விருப்பமா? இந்த ஹெல்ப் லைன் நம்பரை அணுகவும்' - என்று ரயில் நிலையங்களிலும், அரசாங்க அலுவலகங்களிலும், அலங்கார 'மால்'களிலும், பொதுத்தொண்டு நிறுவனங்களின் பதாகைகள் காணப்படும். வயதானவர்களைத் தனிமையிலிருந்து விடுவிக்கும் முயற்சி இது.

'ராம் வருகிறான்' என்பதற்காகவே இசுமி, ஜாப்பனீஸ் கேக் செய்து காத்திருப்பார். பின்னால் உள்ள அழகிய ரோஜா தோட்டத்தின், மேசையில் அமர்ந்து பிளாக் டீயை குடித்தவண்ணம் பேச்சு தொடரும். அன்றைய பேச்சு, அந்நாட்டின் பிரதமர் உரை பற்றி இருந்தது.

'ஏன் அகிரா, இது அவ்வளவு பெரிய பிரச்னையா?'

'நிச்சயமாக ராம்! டேட்டா சொல்கிறபடி இளைஞர்களில் பாதிப்பேர்தான் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதுவும் ஒரே ஒரு குழந்தைதான். இப்படிப் பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் பிற்காலத்தில் இளைஞர்களான பின், அதிலும் பாதிப்பேர் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று வைத்துக்கொள். அப்போது விகிதக் கணக்கு இன்னும் பாதியாகக் குறைந்துவிடும். இப்படியே போனால்... வயதானவர்கள் அதிகமாகவும், இளைஞர்கள் வெகுசிலரும் இருப்பார்கள். இதனால் பல வேலைகளுக்கு ஆள் கிடைக்காது. இன்று, இந்த நாடு எத்தனை செழிப்பாக இருந்தாலும், நாளை இளைஞர்கள் இல்லையென்றால், புதிய சிந்தனை, கடின உழைப்பு இருக்காது. வயதானவர்கள், உதவிக்கு இளைஞர்களை நம்பி இருப்பார்கள் - ஆனால், போதுமான இளைஞர்கள் இருக்க மாட்டார்கள்.'

இசுமி சூடான டீ கெட்டிலை நகர்த்தியபடி, 'இப்படி யோசித்துப் பார் ராம், நூறு பேர் கொண்ட கூட்டத்தில், ஒரே ஒரு குழந்தை மட்டும் இருந்தால் எப்படியிருக்கும்?

குழந்தைகள் குறைந்துவிட்டால் ஸ்கூல், காலேஜ்களின் தேவை சரிந்துவிடும். எல்லா உற்பத்தியும் ஆட்டோமேஷனை நம்பித்தான் இருக்கும். நாட்டின் வரிவருவாய் பெருமளவு குறைந்துவிடும். புது வாய்ப்புகளைத் தேடி, இளைஞர்களில் பலர் வேறு நாட்டுக்குச் சென்று குடியேறிவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சீனியர் சிட்டிசன்களால் தனியாக மேனேஜ் செய்ய முடியாது என்பதால், எல்லோரும் ஒரே இடத்தில் கூடி வாழ்வார்கள். அதனால் பல வீடுகள் வெறுமனே பூட்டப்பட்டு கிடக்கும். ஹீட்டர் ரிப்பேர் என்றால்கூட, ஓர் இளைஞன் வந்து அதைச் சரி செய்வதுக்கு பல நாள்கள் ஆகும். இப்பவே பாரேன், எங்களுடைய 'ஸ்னோ ரிமூவர்' மூன்று வாரங்களாக பழுதாக உள்ளது. ரிப்பேர் செய்யும் ஆளுக்காகக் காத்திருக்கிறோம்.'

'உண்மைதான்' என்று தொடர்ந்தார் அகிரா, 'இன்றைய தேதியில், உலகின் பெரும்பாலான நாடுகளில், இளைஞர்களுக்குப் பிள்ளை பெறும் ஆசை குறைந்துவிட்டது. மருத்துவக் காரணங்களைத் தாண்டி, சுதந்திர மனப்பான்மை, பொருளாதாரச் சுமை போன்ற பல பிரச்னைகள். எதிர்காலத்தில் இந்தியா, சீனா உள்பட எந்த நாட்டுக்கும் இந்த நிலைமை வரலாம். எங்கள் சகாப்தம் இன்னும் சில ஆண்டுகளில் முடிந்துவிடும். ஆனால், உங்களுக்கு வயசாகும்பொழுது உதவிக்கு யார் இருப்பார்கள்?'

இசுமி குறிக்கிட்டு, 'பெற்றோர் நினைப்பதுபோல குழந்தைகள் தங்கள் உடைமையோ, உரிமையோ அல்ல. அவர்கள் நாட்டின் எதிர்காலச் சொத்து...' பேசிக் கொண்டிருந்தவர் எதேச்சையாகத் திரும்ப, அங்கிருந்த மேகாவைப் பார்த்து, 'ஹாய்! நீ எப்பொழுது வந்தாய்? நாங்கள் கவனிக்கவேயில்லை'என்றார்.

'நான் வந்து பத்து நிமிடம் ஆகி விட்டது. நீங்கள் எல்லாம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் பின்னால் உள்ள ரோஜா மலர்களின் வனப்பைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்...'

'டீ எடுத்துக்கோ மேகா' என்ற இசுமி, 'ரோஜாக்களைப் பார்த்தாயே, அதன் அருகிலிருந்த, அழகான மொட்டுகளையும் பார்த்தாயா?' என்று கேட்டார், அவள் கண்களைப் பார்த்தவாறே.

மறுநாள் காலையில் வீட்டுக் கதவைத் திறந்தான் ராம். வெளியே அன்றைய தினசரி பேப்பர் கிடந்தது. முதல் பக்கத்தில், கொட்டை எழுத்தில் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மசோதா பற்றிய செய்தி இருந்தது.

'இனி, குழந்தைகளைப் பெற்றுத் தந்தால் போதும்... பெற்றோர் அனுமதியுடன், குழந்தைகளை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். கல்வி, இருப்பிடம் உள்பட, அனைத்துச் செலவுகளையும் அவர்கள் 20 வயது வரை அரசே பார்த்துக் கொள்ளும். பிறகு அவர்களே தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம்.

பெற்றோர், விரும்பினால் குழந்தைகளை வாரஇறுதி நாள்களுக்கு அழைத்துச் செல்லலாம். விடுமுறைக்கும் கூட்டிச் செல்லலாம். இந்தப் புதிய திட்டம் விரைவில் அமல் படுத்தப்பட உள்ளது.'

மேகா, பிரேக்ஃபாஸ்ட் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் படும்படி ராம் பேப்பரை டீப்பாயில் வைத்தான். துணிகளை இஸ்திரி போட்டபடி, அவளைக் கவனித்தான். கையில் பிரெட் பிளேட்டுடன் வந்தவள் பேப்பரை பிரித்தாள், படித்தாள்.

பேப்பரை மூடிவைத்து, லேப்டாப் பேக் எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினாள். கேரேஜிலிருந்து காரை வெளியே எடுத்தாள்.

ராம் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தான்.

குழந்தைகள் பள்ளி செல்ல வந்து கொண்டிருந்தார்கள். நடைப்பாதை பனிப்பொழிவால் மூடியிருந்தது. தன் இல்லத்தின் முன் கொட்டிக்கிடந்த பனிக்கட்டிகளைக் கஷ்டப்பட்டு ஷவல் மூலம் தள்ளிக் கொண்டிருந்தார், அகிரா. அதைப் பார்த்த குழந்தைகள், அகிரா அருகில் சென்று பனிக்கட்டிகளை அப்புறப்படுத்த உதவினார்கள்.

மேகா, அருகில் சென்று காரிலிருந்து இறங்கினாள். குழந்தை ஒன்று ஸ்நேகமாக கண்சிமிட்டி, 'ஜாயின் வித் அஸ்' என்றது.

'கொடுங்கள் அகிரா, ஐ வில் டூ இட்!'

'பரவாயில்லை மை சைல்ட்' என்று சொல்வதையும் பொருட்படுத்தாமல், ஷவலை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டாள்.

'பாய்ஸ், நேரமாகிவிடும்... கிளம்புங்கள்' என்றபடி, ஐஸ் படுகைகள் அனைத்தையும் வழித்து ஓரத்தில் கொட்டினாள்.

'குட் டே அகிரா' என்று சொல்லி, வாசலில் நின்று கொண்டிருந்த 'இசுமி'க்கு கையாட்டியபடி காரில் கிளம்பினாள்.

அன்று இரவு 8 மணிக்கு, ராம் அலுவலகத்தில் வேலையாக இருந்தபோது, மேகா கூப்பிட்டாள்.

'லேட் ஆகும் மேகா, முக்கியமான வேலையில் இருக்கிறேன்'

'நீ இப்படி வேலையைக் கட்டிக்கொண்டு அழுதால், நான் ஒண்டி ஆளாக எப்படி குழந்தையைப் பெத்துக்க, பார்த்துக்க முடியுமாம்?'

'குழந்தையா?'

'ஆமாம், ஆனால், அரசாங்கத்தின் பராமரிப்பில் இல்லை. நம்மோடுதான் இருக்கும்'

'என்ன சத்தத்தையே காணும்?'

'ஐ'அம் ஆன் த வே டியர்!'

ராம், காரின் ஜன்னல் வழியே பார்த்தான். முழுநிலவு உதயமாகியிருந்தது. அதன் கிரணங்கள் பனி படர்ந்த புல்வெளியில், வெள்ளி ஜரிகைகளாக மின்னிக்கொண்டிருந்தன.

நிலவைப் போல ஓர் அழகான இரவு, அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com