
'பருத்திவீரன்' பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு நடிகர் சசிகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமீர் இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சைனைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு.
இப்பொழுது அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குநர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்தியுடன் பணியாற்றிய இயக்குநர்கள் அழைப்பட்டிருந்தனர். ஆனால், கார்த்தியின் முதல் படத்தை இயக்கிய அமீர் ஏன் அழைக்கப்படவில்லை என கேள்விகள் எழுந்தன. பருத்திவீரன் படத்தின்போது அமீருக்கும் கார்த்திக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளே இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம் என சினிமா வட்டாரத்தினர் பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தனர்.
ஆனால், இயக்குநரும் நடிகருமான அமீர், சில நாள்களுக்கு முன் நேர்காணல் ஒன்றை அளித்தார். அதில், “கார்த்தியின் 25-வது பட நிகழ்வுக்கு என்னை யாரும் முறையாக அழைக்கவில்லை. மூன்றாம் நபரை விட்டு நிகழ்ச்சிக்கு அழைத்தால், வரக் கூடிய ஆள் நான் இல்லை. சம்பந்தப்பட்டவர் என்னை அழைக்கவில்லை. அதைவிட, பருத்திவீரன் படத்தால் தனக்கு மிகப்பெரிய மன உளைச்சலும் பொருளாதார ரீதியாக இழப்பும் ஏற்பட்டது.
இதையும் படிக்க- அமீர் நன்றாக திருடுவார்..! சர்ச்சையாகும் ஞானவேல் ராஜா பேட்டி!
இதற்காக, பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 16 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியும்?” எனக் குறிப்பிட்டார். அமீரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு தன் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.