நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், விஜய் பேசியிருந்த தகாத வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது டிரைலரில் அந்த வார்த்தை ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கல்கி 2898 ஏடி - அமிதாப் பச்சன் போஸ்டர் வெளியீடு!
இந்த நிலையில், நேற்று (அக்.11) லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டது. அதில், நடிகர் விஜய் என்பதற்கு பதிலாக ‘தளபதி விஜய்’ என குறிப்பிட்டிருந்தனர்.
இதனை, விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கினாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுவினரால் ‘தளபதி’ என்றழைப்பட்டு வருவதால், விஜய்யை தளபதி எனக்குறிப்பிட்டு அரசாணையை தயார் செய்த அதிகாரி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறிவருகின்றனர்.