
மகாநதி தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை திவ்யா, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடிகை திவ்யா மகாநதி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பயணங்களின் மீது மிகுந்த பிரியம் கொண்ட நடிகை திவ்யா, தனது சக நடிகர், நடிகைகளுடன் அடிக்கடி பயணம் செல்வது அதிகம். பெரும்பாலும் ஆன்மிக பயணங்களாகவே அவை இருக்கும்.
மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய அவர், படப்பிடிப்பு முடிந்து கிடைக்கும் ஓய்வு நாள்களிலும் புதிய இடங்களுக்குச் செல்வதை விரும்பக்கூடியவர். தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார்.
நடிகை திவ்யாவுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் விரைவில் குணமாக வேண்டும் என கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடரில் நடிகை திவ்யா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் முதலில் நடிகை பார்த்திபா நாயகியாக நடித்து வந்தார்.
அவருக்கு மலையாள படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால், மகாநதி தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை திவ்யா நடித்து வந்தார்.
உடல்நிலை மோசமடைந்த காரணத்தால், தற்போது திவ்யாவும் மகாநதி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் மகாநதி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை திவ்யா, மகாநதி தொடரிலிருந்து விலகுவதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெங்குவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் இருப்பதால் மகாநதி படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை என்பதற்காக வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இந்த நிலை, அப்பாத்திரத்தில் நடிக்க வேறு நபரைத் தேட வேண்டிய நிலையை என் குழுவுக்கு ஏற்படுத்தும். மகாநதியில் கங்கா பாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க முடியாததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கங்காவுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றிகள். உங்களை மீண்டும் சந்திப்பேன் என நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகை திவ்யா குணமடைய ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.