தமிழில் மோதலும் காதலும், மலர் ஆகிய தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை அஸ்வதி, மலையாளத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மலையாளத்தில் ஒளிபரப்பாகவுள்ள அபூர்வராகங்கள் என்ற தொடரில் அஸ்வதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
2021-ல் மலையாளத்தில் ஒளிபரப்பான மனசினக்கர என்ற தொடரில் அஸ்வதி நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். எனினும் தமிழில் இவர் நடித்த மோதலும் காதலும் தொடரில் இளம் தலைமுறை ரசிகர்கள் பலரைக் கவர்ந்தார்.
இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலர் தொடரிலும் அஸ்வதி நடித்திருந்தார். எனினும், அந்தத்தொடரிலிருந்து குறுகிய காலத்திலேயே அஸ்வதி வெளியேறினார். அவருக்கு பதிலாக நடிகை பிரீத்தி சர்மா மலர் தொடரில் நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் அஸ்வதி நடித்த மோதலும் காதலும் தொடர் 2024 ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. ஓராண்டு காலமே இந்தத் தொடர் ஒளிபரப்பாகியிருந்தாலும் அதன்மூலம் கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது.
இளம் தலைமுறை ரசிகர்கள் பலர், மோதலும் காதலும் தொடரில் அஸ்வதியின் நடிப்பை பாராட்டியுள்ளனர். அஸ்வதியின் விடியோ அதிக அளவு இணையத்தில் அவரின் ரசிகர்களால் பகிரப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் தனது ஆரம்பகால வாழ்க்கையை ஆரம்பித்தார். தற்போது தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது தாய் மொழியில் ஒளிபரப்பாகும் தொடரில் நாயகியாக அஸ்வதி நடிக்கவுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.