ராஜமௌலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இது மகேஷ் பாபுவின் 29ஆவது படம் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்தப் படம் அயன் பாணியில் உலகம் முழுக்க சுற்றும் இளைஞனின் கதை என முதலில் கூறப்பட்டது. பின்னர், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜமௌலி - மகேஷ் பாபு படம் உருவாகவுள்ளதாக ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தெரிவித்திருந்தார்.
இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக நவீன தொழில்நுட்பத்தில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் இந்தப் படத்தினை நாங்கள் தயாரிக்கவில்லை என மறுத்து அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாயகனுக்கு இணையான கதாபாத்திரம் என்றும் இதற்கான ஒப்பந்தத்தில் பிருத்விராஜ் கையெழுத்திட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளொயாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சலார் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லனாக கலக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.