
நடிகர் தனுஷ் போயஸ் கார்டன் இல்லம் குறித்த கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் நாளை மறுநாள் (ஜூலை 26) திரைக்கு வருகிறது. கேங்ஸ்டர் பின்னணியில் உருவான இப்படம் ஏ சான்றிதழுடன் திரைக்கு வருவதால், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில், டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வரவேற்பைப் பெற்றுள்ளன. முக்கியமாக, வாட்டர் பாக்கெட், அடங்காத அசுரன் பாடல்கள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ராயன் இசைவெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், தனுஷ் தன் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரைப் பாராட்டினார்.
மேலும், “போயஸ் கார்டனில் நான் வீடு கட்டியது இவ்வளவு பெரிதாகப் பேசப்படும் என நினைத்திருந்தால் சாதாரண அடுக்குமாடி குடியிருப்பிலேயே இருந்திருப்பேன். நான் போயஸ் கார்டனில் வீடு வாங்கவே கூடாதா? தெருவில் இருந்தால் தெருவிலேயே இருக்க வேண்டுமா? இந்த போயஸ் கார்டன் வீட்டுக்குப் பின் ஒரு கதை இருக்கிறது.
நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகன் என்பதால் அவரை எப்படியாவது பார்க்க வேண்டும் என நினைத்து என் 16வது வயதில் போய்ஸ் கார்டனுக்குள் சென்றேன். அங்கே, அவர் வீட்டின் முன் கூட்டம் இருந்தது. அதேபோல், அவர் வீட்டுக்கு அருகே இன்னொரு வீட்டின் முன்பும் கூட்டம் இருந்தது. யாரென விசாரித்ததில் அது ஜெயலலிதா அம்மாவின் வீடு என்றார்கள்.
அப்படியான, இந்த போயஸ் கார்டனில் எனக்கும் வீடு இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தேன். அன்று 16 வயதில் வெங்கடேஷ் பிரபுவுக்கு (தனுஷின் இயற்பெயர்) இருந்த ஆசையை தனுஷ் என்பவன் 20 ஆண்டுகள் கடினமாக உழைத்துப் பெற்றுக் கொடுத்த பரிசு அந்த வீடு. என்மேல் இருக்கும் விமர்சனங்களுக்கு காலம் பதில் சொல்லும்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.