
ஜோர்த்தாலா எனும் பாடல் விடியோ மூலம் பிரபலமானவர் ராப் இசைப் பாடகர் அசல் கோலார். பின்னர் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நா ரெடிதான் வரவா படத்தில் ஒரு ராப் போர்ஷனை எழுதி பாடியிருப்பார். இந்தப் பாடல் மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது, விஜய் நடிக்கும் கடைசி படமான விஜய் 69 படத்திலும் அசல் கோலார் ஒரு பாடல் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராப் இசையில் பிரபலமான அசல் கோலார் பேச்சுலர், பாரிஸ் ஜெயராஜ், மகான், குலு குலு, காஃபி வித் காதல் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியும் பாடியும் உள்ளார்.
இந்நிலையில், தொகுப்பாளினி டிடியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற அசல் கோலார் (கோளாறு இல்லை என்று பெயர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது) பங்கேற்று பேசினார். இதில் அசல் கோலார் பல விஷயங்கள் குறித்து பேசினார். அதில் பிக்பாஸ் நெகட்டிவிட்டி, வேட்டையன் குறித்து பேசியதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு நான் நினைத்தது வேறு. அங்கு எனக்கு கிடைத்தது வேறு. நிகழ்ச்சி முடிந்ததும் என்னால் 10 நாள்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மன உளைச்சலால் உடல் எடை குறைந்தேன். நான் எதுவாக இருக்கக் கூடாதென நினைத்தேனோ அதுவாக என்னைப் பலரும் நினைத்தது கஷ்டமாக இருந்தது.
எல்லோரிடமும் போய் நாம் அப்படியில்லை எனக் கூற முடியாது. நமது வேலையின் மூலமாக நாம் பதிலளிக்க வேண்டும் என நினைத்தேன். வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
வேட்டையன் படம் கிடைத்தது எதிர்பாராதது. முதலில் பாடல் எழுத அழைக்கிறார்கள் என இருந்தேன். பின்னர் நடிக்க வேண்டும் என ஞானவேல் சார் கூறியதும் சற்று பயந்தேன். அதற்காக பயிற்சியும் எடுத்தேன்.
முதல்நாள் முதல் டேக் ரஜினி சார் என்னை என்கவுண்டர் செய்யும் காட்சி. அதில் முதல் டேக்கிலே ஓக்கே ஆனது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.
சமீபத்தில் அசல் கோலாரு எழுதி இசையமைத்து பாடிய ‘யார்ரா இந்தப் பையன்’ எனும் இசைப் பாடல் வெளியாகி யூடியூப், சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
யூடியூப்பில் 2 வாரங்களில் 7.5 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.