அனிமல் படத்தில் ‘ஜோயா’ கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை திரிப்தி திம்ரி. 2017இல் போஸ்டர் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானாலும் ‘லைலா மஜ்னு’, ‘புல்புல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் அனிமல் படம் இந்தியா முழுவது புகழைப் பெற்றுத் தந்தது. இவரது அழகான தோற்றம் மட்டுமின்றி கச்சிதமான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றன.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் திரிப்தி திம்ரி இந்தியாவின் ‘புதிய நேஷ்னல் க்ரஷ்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். படத்தில் வரும் ‘அண்ணி-2’ என்ற வார்த்தையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, ராஜ்குமார் ராவ் உடன் விக்கி வித்யா கா வோக் வாலா விடியோ படத்தில் நடித்துள்ளார். இதில் மேரே மெஹபூப் பாடலில் திரிப்தி திம்ரியின் நடன அசைவுகள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தன.
ஏன் இந்தமாதிரி படங்களில் நடிக்கிறாரெனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
விமர்சனத்துக்குப் பதிலடி
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் திரிப்தி திம்ரி கூறியதாவது:
ஒரு நடிகையாக நான் புதிய புதிய விஷயங்களை முயற்சிக்கிறேன். முதலில் நான் ஒரு நடிகையாக மாற நடிப்பு மட்டுமே போதுமென நினைத்தேன். ஆனால், உண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் எப்படி நடக்க வேண்டும் எனத் தெரிந்திருக்க வேண்டும், நடனமாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக நடனமாட வேண்டுமென்பதெல்லாம் புரிந்தது.
நான் எல்லாவற்றையும் முயற்சிக்கிறேன். ஆனால், ஒருவர் எல்லாவற்றையும் சரியாக செய்ய முடியாது. அதேசமயம் முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது? நான் இதற்கு முன்பு நடனாமாடியதே இல்லை. படப்பிடிப்பின்போது இது எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரியான எதிர்வினைகள் வருமென நான் நினைக்கவேயில்லை..
முயற்சிகளை நிறுத்தக்கூடாது
எப்போதுமே சில விஷயங்கள் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. அதனால், நாம் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருக்கக் கூடாது.
முதல் நாளிலிருந்து நான் எனது உள்ளுணர்வை நம்புகிறேன். நமது உடல் நமக்கு எப்போதும் அறிகுறிகளை உணர்த்தும் என்றார்.
இந்தப் படம் ஆலியா பட்டின் ஜிக்ராவுடன் அக.11 அன்று மோதுகிறது. வெளியீட்டுக்கு இன்னும் 2 படங்கள் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.