
எமர்ஜென்சி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காததற்கு பீபி கொலபாவாலா, ஃபிர்டோஷ் பூனிவாலா அடங்கிய மும்பை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு மத்திய தணிக்கை வாரியத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனாவுக்கு இதுவரை 4 முறை தேசிய விருதுகள் தரப்பட்டுள்ளன.
எமர்ஜென்சி படத்தினை கங்கனா ரணாவத்தே இயக்கியுள்ளார். உடன் இணைத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தப் படத்தை தணிக்கை செய்யவிடாமல் மிரட்டுவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
தணிக்கை வாரியத்துக்கு தைரியமில்லை
மும்பை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் நீதிபதிகள் கூறியதாவது:
படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் பெற ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே தணிக்கை முடிவடைந்த நிலையில் சான்றிதழ் மட்டுமே கொடுக்கப்படாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நீங்கள் (மத்திய தணிக்கைத் துறை) எதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும். படம் ரிலீஸ் ஆகாது என்றாவது கூறுவதற்கு உங்களுக்கு தைரியம் வேண்டும். அப்போதுதான் உங்களது தைரியத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பாராட்ட முடியும். மதில்மேல் பூனையாக இருக்கக் கூடாது.
ஏற்கனவே செப்.18க்குள் தணிக்கைச் செய்ய ஆணையிடப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் உயர்மட்ட தணிக்கைக் குழு பரிசோதிப்பதாகக் கூறுவது பொறுப்பை ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் கைமாற்றும் செயல் ஏற்கத்தக்கதல்ல.
கெடு விதித்த நீதிமன்றம்
இந்தப் படம் ரிலீஸ் ஆவதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுமென தணிக்கை வாரியம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. மேலும், அதனால்தான் சான்றிதழ் அளிக்கவில்லை எனவும் கூறக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையெனில் நாம் படைப்பு சுதந்திரத்துக்கும் நினைத்ததை கூறுவதற்கும் தடையை ஏற்படுத்துவது போலிருக்கும்.
படத்தில் பார்ப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் அளவுக்கா இந்த நாட்டிலுள்ள மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்? படைப்பு சுந்தந்திரம் என்னாவது? மக்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சிமிக்கவர்களாக இருக்கிறார்கள். எனது இன மக்கள் படத்தினை எப்போதும் ஜாலியாகவே பார்ப்பார்கள். நாங்கள் அதுகுறித்து எதுவும் சொல்வதில்லை. சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவோம்.
இரண்டு வாரங்கள் கால அவகாசம் அளிக்க முடியாது. செப்.25க்குள் தணிக்கைச் சான்றிதழ் குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டுமென கெடு விதிக்கப்படுகிறது என்றார்கள்.
ரிலீஸ் தாமதம் ஏன்?
”இந்திரா காந்தியை கொலை செய்ததை, பிந்தர்வாலேவை காட்டக்கூடாது, பஞ்சாப் கலவரங்களை காட்டக்கூடாதென்றும் தான் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
இவைகளைத் தவிர்த்துவிட்டு வேறு எதைக் காட்டுவதென எங்களுக்கு தெரியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாட்டின் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்” என கங்கனா கூறியிருந்தார்.
சீக்கியர்கள் குறித்து தவறாக காண்பிப்பதாக இந்தப் படத்தை வெளியடக்கூடாதென சிரோமனி அகாலிதளம் மத்திய தணிக்கை வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.