நடிகர் விஜய் ஆண்டனி சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.
இசையமைப்பாளராக இருந்து நடிக்க வந்தவர் விஜய் ஆண்டனி. முதல் படமான, ‘நான்’ படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து, சலீம், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து தனக்கான ரசிகர்களை அடைந்தார்.
சில படங்கள் தோல்வியடைந்தாலும் விஜய் ஆண்டனிக்கான மார்க்கெட் குறையவில்லை. எப்போதும், கைவசம் சில படங்களை வைத்திருப்பார்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளிவந்த ரோமியோ மற்றும் மழைபிடிக்காத மனிதன் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. வருகிற செப். 27 ஆம் தேதி இவர் நடித்த ஹிட்லர் திரைப்படம் திரைக்கு வருகிறது.
அடுத்ததாக, சில படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே, புதிய முயற்சியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிதாகத் துவங்கும் ‘மகா நடிகை’ என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளார். இதன் முதல் ஒளிபரப்பு அக்டோபர் 5 ஆம் தேதி துவங்குகிறது.
படங்களின் புரமோஷன் மற்றும் நேர்காணல்களில் பேசும் விஜய் ஆண்டனியின் வாழ்க்கை பார்வையும், கருத்துகளும் அறிவுரைகளும் பலரை ஈர்த்திருக்கின்றன. அப்படியான சூழலில், சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் அவர் என்னென்ன பேசப்போகிறார் என்பதைக் குறித்த ஆர்வமும் எழுந்திருக்கிறது.