
குறும்படத்திலிருந்து திருடப்பட்டதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு லாபதா லேடீஸ் திரைக்கதை எழுத்தாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் பிப்லாப் கோஸ்வாமி எழுத்தில் கடந்தாண்டு வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படம் 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு தேர்வாகி பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படம் 2019இல் வெளியான அரேபிய குறும்படமான ‘புர்கா சிட்டி’ கதையைப் போலவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதற்கு இதன் திரைக்கதை எழுத்தாளர் பிப்லாப் கோஸ்வாமி கூறியதாவது:
100 சதவிகிதம் ஒரிஜினலான கதை
எங்களது கதை, கதாபாத்திரங்கள், வசனங்கள் அனைத்தும் 100 சதவிகிதம் ஒரிஜினல் (அசலானது). இதில் கதைத்திருட்டு என்பது முழுமையான பொய்.
இந்தக் குற்றச்சாட்டுகள் என்னுடைய உழைப்பை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் சிறுமைப்படுத்துவதாகும்.
இந்தப் படத்தின் சுருக்கமான கதையை, முழுக்கதையின் மேலோட்டமான விவரிப்புடன் ’டூ பேட்ர்ஸ்’ (இரண்டு பறவைகள்) என்ற தலைப்பில் திரைக்கதை ஆசிரியர்கள் அசோசியேஷனில் ஜூலை 3, 2014-இல் பதிவு செய்துள்ளேன்.
இதில் தெளிவாக தவறான மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவதையும் குடும்பத்தினர் அதிர்ச்சி ஆவதையும் எழுதி இருக்கிறேன். அங்குதான் கதையே எழுச்சி பெறுகிறது.
திரைக்கதையை 2018இல் பதிவு செய்துள்ளேன்
வருத்தமடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார். அங்கு அவரிடம் இருப்பதும் முகம் மறைக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே.
முழுமையான திரைக்கதையை 2018இல் பதிவு செய்துள்ளேன். சினிஸ்டான் ஸ்டோரிடெல்லர்ஸ் போட்டியில் 2ஆம் இடம் பிடித்தது.
பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்தக் கதை, கதாபாத்திரங்கள், வசனங்கள், கதைச் சொல்லல் பாணி, சமூக தாக்கம் என பாலின பாகுபாட்டையும் ஆணாதிக்கத்தையும் ஆழமாகவும் அதேசமயம் நுணுக்கமாக எழுதியிருப்பேன் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.