நிலா வெளிச்சத்தில் சில கொலைகள்... மம்மூட்டியின் களம்காவல் - திரை விமர்சனம்!
களம்காவல் - திரை விமர்சனம்(2.5 / 5)
நடிகர் மம்மூட்டியின் களம்காவல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நாகர்கோவில் - கேரள எல்லையில் திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இளம்பெண்கள் காணாமல் போக, ஒரே ஒரு வழக்கு மூலமாக பல பெண்கள் மாயமானது காவல்துறைக்குத் தெரிய வருகிறது. மிகச் சின்ன ஊரில் இந்தக் குற்றம் எப்படி நடந்தது என்கிற கோணத்தில் காவல்துறை அதிகாரி விநாயகன் விசாரணையைத் துவங்குகிறார். மாயமான பெண்கள் என்ன ஆனார்கள்? இந்தக் குற்றத்திற்குப் பின் இருப்பது யார்? எனக் கதை செல்கிறது.
பூனை - எலி கதையாக பரபரப்பான சஸ்பென்ஸாக களம்காவல் உருவாகியுள்ளது. களம்காவல் என்றால் தென்குமரிப்பக்கம் பெண் காவல் தெய்வத்தைக் குறிப்பிடுவதாகக் கூறுகின்றனர். அதற்கு முரணாக, பெண்கள் தங்கள் காவலை இழக்கும் தருணங்களைத் திரைக்கதையில் வைத்து, சைக்கோ குற்றவாளியைத் துரத்தும் காவல்துறை ஆக கதை அமைக்கப்பட்டுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படத்தின் எழுத்தாளரான ஜித்தின் கே ஜோஸ் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சில காட்சிகளை எடுத்தவிதத்திலும் உருவாக்க ரீதியாகவும் அனுபவம் வாய்ந்த இயக்குநர் போன்றே தெரிகிறார்.
சில கொலைகளைக் கண்டறியும் முறையும், சாதாரண ஊருக்குள் இப்படியெல்லாம் நடக்கும் வரை காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என யோசிக்கும்போது ஒரு டிவிஸ்ட் அந்தக் கண்ணோட்டத்தை மாற்றுவதுபோல் இருந்தது இடைவேளைக்கு மேல் அடுத்தது என்ன என்கிற ஆவலைத் தூண்டியது.
நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு கம்பெனியே இப்படத்தைத் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதைகளைத் திரைப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்து செய்து வருவது பாராட்டுக்குரியது. நடிகர் மம்மூட்டியும் தனக்கிருக்கும் பிம்பங்கள் பற்றியெல்லாம் கவலைப்படமால் ஸ்டான்லி என்கிற கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்குகிறார்.
ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது, சிரிப்பிலேயே குரூரத்தைக் கடத்துவது என அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மம்மூட்டிக்கு என்னதான் வராது? என காட்சிக்குக் காட்சி அதில் பரிணமத்தையும் தர முயற்சித்திருப்பது ஈர்க்கிறது. கிளைமேக்ஸில் இவருக்கும் விநாயகனுக்கான காட்சி நல்ல ஆக்கம்.
நடிகர் விநாயகன் முற்றிலும் மாறி கம்பீரமான நடிகராக அசத்துகிறார். விரைப்பாக முகபாவனையை வைத்தபடி அவர் விசாரிக்கும் முறைகள், பேசும் வசனங்கள் எல்லாம் அக்கதாபாத்திரத்திற்கு அதிக பலத்தை அளிக்கின்றன.
சன்ஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் என்பதால் சில காட்சிகளை விவரித்தால் அதன் சுவாரஸ்யம் போகும்படியே காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், முக்கியமான டிவிஸ்டுகள் அழுத்தமானவையாக மாறவில்லை. இதுதான் நடக்கப்போகிறது எனத் தெரிந்து கிளைமேக்ஸை எதிர்பார்ப்பது ஆகிவிட்டது பெரிய குறை.
இதனை ஏன் மம்மூட்டி கம்பெனி தயாரித்தது எனப் புரிந்துகொள்ள முடிந்தாலும் திரைக்கதை சொதப்பலால் மிக நல்ல படமாக வந்திருக்க வேண்டிய களம்காவல் தட்டுத் தடுமாறுகிறது.
உருவாக்க ரீதியாக ஒளிப்பதிவாளர் ஃபைசல் அலி நல்ல ஒளியமைப்புகளைச் செய்திருக்கிறார். விடுதி காட்சிகளும், இரவுக் காட்சிகளும் நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
மலையாள சினிமாவுக்கு நல்வரவாக இசையமைப்பாளர் முஜீத் மஜீத்தின் பாடல்களும் பின்னணி இசைகளும் கவர்கின்றன. முக்கியமாக, நிலா காயம் வெளிச்சம் பாடல் இனி அதிகம் கேட்கப்படும். பழைய இளையராஜா பாடல்களைப் போல் இப்படத்திற்காக பாடல்களுக்கு இசையமைத்திருந்ததும் அருமையான முயற்சியாகவே தோன்றியது.
களம்காவல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானாலும் சாதாரண த்ரில்லர் கதையாக மட்டுமே நின்றுவிட்டது. பார்க்கலாம்.
இதையும் படிக்க: ரவிக்கையின் சமூக மதிப்பென்ன? அங்கம்மாள் - திரை விமர்சனம்!
actor mammootty's kalamkaval movie review
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
