

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அண்மையில் படத்தின் 2-வது பாடலான ஒரு பேரே வரலாறு பாடலின் லிரிக்கல் விடியோ வெளியானது.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் திடலில் வருகின்ற டிச. 27 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்தியா சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 80 ஆயிரம் ரசிகர்களுடன் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவுள்ளன.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய்யின் கடைசிப் படம் ஜன நாயகன் ஆகும்.
கடந்த காலங்களில் இசை வெளியீட்டு நிகழ்வுகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் அரசியல் கருத்துகளை விஜய் வெளியிட்டு வந்த நிலையில், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அவரின் பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியிலான பேச்சுக்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக மலேசிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, அரசியல் சார்ந்த பதாகைகள் உள்ளிட்டவையும் நிகழ்ச்சி திடலுக்குள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடையை மீறி அரசியல் ரீதியாக யார் பேசினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியா போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் விஜய்யின் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.