
பொங்கல் பண்டிகையையொட்டி 8 திரைப்படங்கள் அடுத்த வாரத்தில் வெளியாகவுள்ளது.
அடுத்த வார இறுதியில் இருந்து பொங்கல் விடுமுறை தொடங்குவதால், வணங்கான், கேம் சேஞ்சர், படைத் தலைவன் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வணங்கான்
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா முதலில் நடித்த நிலையில், பாதியில் விலகினார். இதையடுத்து, நடிகர் அருண் விஜய்யை வைத்து படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பாலா.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
கேம் சேஞ்சர்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், எஸ். ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படை தலைவன்
இயக்குநர் அன்பு இயக்கத்தில் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில், கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மெட்ராஸ்காரன்
வாலிமோகன் தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள மெட்ராஸ்காரன் திரைப்படம் ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது.
இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். நாயகியாக நடிகர் வருண் தேஜின் தங்கை நிஹாரிகா கொனிடேலா நடித்துள்ளார்.
நேசிப்பாயா
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடித்துள்ள நேசிப்பாயா திரைப்படம் ஜனவரி 14 (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், நாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
மேலும் சிபி சக்ரவர்த்தி நடித்துள்ள டென் ஹவர்ஸ் திரைப்படம், 2கே லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து விலகியதை தொடர்ந்து, அதிகளவிலான படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.