பிரபல நடிகர் மீது விஷால் பட நடிகை பாலியல் குற்றச்சாட்டு: விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு!

பிரபல நடிகர் மீதான மீ டூ புகார் குறித்து...
நானா படேகர் - தனுஸ்ரீ தத்தா
நானா படேகர் - தனுஸ்ரீ தத்தா
Published on
Updated on
1 min read

பிரபல நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா எழுப்பிய மீ டூ குற்றாச்சாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடிகை தனுஸ்ரீ தத்தா விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர், ஹிந்தியில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நடிகர் நானா படேகருடன் சேர்ந்து நடித்திருந்தார்.

கடந்த 2018ம் ஆண்டு மீ டூ (#Metoo) இயக்கம் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை நடிகைகள் உள்பட பல துறைகளில் உள்ள பெண்கள் வெளிப்படுத்தினர்.

அப்போது, நடிகை தனுஸ்ரீ தத்தா 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.

மார்ச் 23, 2008 அன்று நடந்ததாக சொல்லப்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து 2018-ம் ஆண்டு அக்டோபரில் தனுஸ்ரீ தத்தா வழக்குப்பதிவு செய்தார்.

இதில், தன்மீது அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நானா படேகர் விளக்கமளித்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிபதியிடம் முழு அறிக்கை சமர்ப்பித்த காவல்துறையினர் தனுஸ்ரீ வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது எந்த குற்றமும் இல்லை என தெரிவித்தனர். மேலும், பதியப்பட்ட வழக்கு பொய்யானது என்றும் அதனை நிராகரிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தனுஸ்ரீ தத்தா அதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்தார். மேற்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த அந்தேரி நீதிமன்ற நீதிபதி என்வி பன்சால், “2008-ல் நடைபெற்ற சம்பவத்திற்கு 2018 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் 354, 509 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு குற்றங்களுக்கும் குற்றவியல் விதிமுறைகளின்படி 3 ஆண்டு கால வரம்பு உள்ளது.

குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் அமைப்புகள் குற்றத்தை விரைவாக கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள இந்தக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக வழக்குப்பதிவு செய்ததற்கான மன்னிப்பு விண்ணப்பம் மனுதாரரால் தாக்கல் செய்யப்படவில்லை. மனுதாரர் அதற்கான காரணத்தை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவேண்டும்” என்றார்.

மேலும், “காலக்கெடு முடிந்து 7 அண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கை விசாரணை செய்ய எந்தக் காரணமும் இல்லை.

இந்தக் காலதாமதத்தை காரணம் ஏதுமின்றி ஏற்றுக் கொண்டால் அது நியாயத்திற்கும் சட்டத்திற்கும் எதிராகிவிடும்.

நிகழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பொய் என்றோ, உண்மை என்றோ நீதிமன்றத்தால் கூறமுடியாது. ஏனெனில், அதன் உண்மைத் தன்மை குறித்து நீதிமன்றம் விவாதிக்கவில்லை. எனவே, குறிப்பிட்ட காரணங்களுக்காக இதை நீதிமன்றம் விசாரிக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com