நடிகர் ராஜேஷ் - குணங்களும் குணச்சித்திரங்களும்!

நடிகர் ராஜேஷின் மறைவு திரைத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
நடிகர் ராஜேஷ் - குணங்களும் குணச்சித்திரங்களும்!
Published on
Updated on
3 min read

நடிகர் ராஜேஷ் மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் அணைக்காட்டை பூர்வீகமாக கொண்ட வில்லியம் - வில்லி கிரேஸ் தம்பதியர் மன்னார்குடியில் வாழ்ந்த போது 1949 டிசம்பர் 20 ஆம் தேதி பிறந்தவர் ராஜேஷ். இளம்வயதிலேயே படிப்பின் மீது மிகுந்த ஆர்வம்கொண்டவர், கல்லூரி படிப்பு முடிந்ததும் சென்னையில் ஆசிரியராகத் தன் பணியைத் துவங்கினார். ஆனால், சிறுவயதிலிருந்தே நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகராக இருந்ததால் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்தார்.

ஆசிரியராக பணியாற்றும்போதே இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய, “அவள் ஒரு தொடர்கதை” படத்தில் வாய்ப்பு கிடைக்க சிறிய கதாபாத்திரத்திரம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். நடிப்புடன் கம்பீரமான உடல்வாகு என்பதால், 1979-ல் வெளியான, ‘கன்னிப் பருவத்திலே’ திரைப்படம் மூலம் நாயகனாகவும் வெற்றி பெற்றார்.

அப்படத்தால் நல்ல நடிகர் எனப் பெயரெடுத்தவர் நாயகனாக மட்டுமே நடிக்காமல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி, அவருக்கு ’அந்த 7 நாட்கள்’ மிக முக்கியமான படமாகவே அமைந்தது. தொடர்ந்து, தனிக்காட்டு ராஜா, தாய் வீடு, பயணங்கள் முடிவதில்லை, அச்சமில்லை அச்சமில்லை என சினிமாவுக்குள் அறிமுகமான 5 ஆண்டுகளில் 45-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து குணச்சித்திர நடிகராக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

சிவாஜியைப் போற்றிக்கொண்டிருந்த ரசிகர் என்பதால் ஏதாவது ஒரு காட்சியிலாவது தன் உடல்மொழியில் சிவாஜியின் நளினத்தைக் கொண்டுவந்துவிடுவார் என்றே சக கலைஞர்கள் கூறுகின்றனர்.

ராஜேஷின் குணச்சித்திர படங்களில் பொங்கலோ பொங்கல் திரைப்படம் முக்கியமானது. அப்படத்தில் இடதுசாரி சிந்தனையாளராக, வேலையில்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.

பொங்கலோ பொங்கல் திரைப்படத்தில் ராஜேஷ்...
பொங்கலோ பொங்கல் திரைப்படத்தில் ராஜேஷ்...

2000-களின் துவக்கத்தில் தீனா, ரமணா, ரெட், விருமாண்டி, ஆட்டோகிராஃப் என பல வெற்றிப் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். வயது காரணமாக, சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் ராஜேஷ் ஜோதிடத்திலும் நிபுணராகவே இருந்திருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சிந்தனை கொண்டவரான ராஜேஷுக்கு ஜோதிடம் மீதும் எந்த நம்பிக்கையும் இல்லை. ஒருமுறை தனக்குத் திருமணம் நடப்பதற்குக்கு முன் ஜோதிடர் ஒருவரைச் சென்று பார்த்திருக்கிறார். அந்த ஜோதிடர், நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணிற்குத் தாய் இருக்க மாட்டார் எனக் கூறினாராம். ஆனால், ராஜேஷுக்கு நிச்சயித்த பெண்ணுக்கு தாய், தந்தை இருக்க, ஜோதிடத்தை நினைத்து சிரித்திருக்கிறார்.

ஆனால், திருமணத்திற்கு முன் எதிர்பாராத விதமாக பெண்ணின் தாயார் உயிரிழக்க, அதன்பின் ஜோதிடம் மீது ராஜேஷுக்கு ஆழமான கவனம் ஏற்பட்டிருக்கிறது. அதை முறையாகக் கற்றுக்கொண்டவர், பல விஷயங்களைச் சரியாகக் கணித்திருக்கிறார் என்கின்றனர் அவரிடம் ஜோதிடம் பார்த்தவர்கள்.

நடிப்பு, ஜோதிடம் கடந்து நிறைய விஷயங்களில் அலாதியான ஆர்வத்துடனே ராஜேஷ் இருந்திருக்கிறார். எப்போது சந்திக்கச் சென்றாலும் கையில் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்திருப்பார் என்றே நண்பர்கள் நினைவு கூறுகின்றனர்.

முக்கியமாக, மார்க்ஸிய சிந்தனைகள் அவரை ஈர்க்க, 4 ஆண்டுகள் மார்க்ஸிய புத்தகங்களைப் படித்து அதுகொடுத்த உத்வேகத்தில் லண்டனிலுள்ள காரல் மார்க்ஸின் கல்லறைக்குச் சென்றிருக்கிறார். பின், சென்னை திரும்பியவர் தன்னுடைய விருப்பப்படி தனக்கான கல்லறையைக் கட்டிக்கொண்டாராம். மகனுக்கும் மகளுக்கும் எதற்கு சிரமம் கொடுக்க வேண்டும்? எனக்குப் பிடித்ததுபோல் என் கல்லறையைக் கட்டியிருக்கிறேன். இறந்தபின் எப்படி அமைய வேண்டும் என சொல்லவா முடியும்? என்றாராம்.

நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ்

ஆச்சரியமாக, நடிகர் கமல் ஹாசனே முக்கியமானத் திரைப்படங்களை ராஜேஷுக்கு பரிந்துரை செய்வாராம். உலக சினிமாக்கள் மற்றும் திரைக்கதைகள் மீது அபாரமான அறிவு கொண்டவராக இருந்திருக்கிறார். ஆனால், அவர் திரைப்படங்களை இயக்கவில்லை. காரணம், பயம்தான் எனக் கூறினாராம். பணத்தை முதலீடு செய்து வீணாகப் போய்விட்டால் என்ன செய்வது? எனத் தன் குணங்களின் எல்லைகள் என்ன என்பதை நடைமுறை சாத்தியங்களுடன் தொடர்புப்படுத்தி வாழ்ந்திருக்கிறார்.

இவற்றையெல்லாம் விட உடல் அரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருந்தவர் என்கின்றனர். 70 வயதைத்தாண்டியும் ஏன் தனக்கு முடி கொட்டவில்லை என வருத்தப்பட்டாராம். காலையில் எழுந்ததும், தண்ணீரிலிருந்து உண்ணும் உணவு வரை திட்டமிடலை வைத்திருந்திருக்கிறார். சில நாள்களுக்கு முன் , “99 வயது வரை வாழ ஒரு விஷயம் இருக்கிறது. வீட்டுக்கு வாங்க சொல்லித்தரேன்” என தன்னிடம் கூறியதாக நடிகர் பார்த்திபன் நினைவு கூர்கிறார்.

சினிமா, ஜோதிடம், மருத்துவம் என பலதுறைகளிலும் விஷயம் தெரிந்தவர் என்பதால் திரைத்துறையினரிடம் மிகுந்த செல்வாக்குடனே இருந்திருக்கிறார் ராஜேஷ். இவற்றையெல்லாம் விட இயல்பிலேயே நல்ல குணம் கொண்ட மனிதர் என்றே அவருடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com