
நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளதை நடிகர் கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமலும் ரஜினியும் இணைந்து நடிக்கவுள்ளதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், சமீபத்தில் துபையில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார்.
விருது விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் சதீஷ், 46 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்களும் ரஜினியும் இணைந்து நடிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து கமல் பேசியதாவது:
“இருவரும் இணைந்து நீண்ட நாள் ஆகிறது. நாங்கள் விரும்பி பிரிந்திருந்தோம். ஒரு பிஸ்கட்டை இரண்டு பேரும் பகிர்ந்து சாப்பிட்டோம். பின், ஆளுகொரு பிஸ்கட் கிடைத்தது, அதை வாங்கி நன்றாக சாப்பிட்டோம். தற்போது மீண்டும் அரை பிஸ்கட் போதும் என்கிற மகிழ்ச்சி எங்களுக்குள் இருக்கிறது. அதனால், இணைந்துள்ளோம்.
எங்களுக்குள் போட்டி நீங்கள் ஏற்படுத்தியதுதான். எங்களுக்குள் போட்டியே இல்லை. வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம். அப்போதே இருவரும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டோம். அதைதான் கடைபிடித்து வருகிறோம்.
நாங்கள் சேருவது வணிக ரீதியாக பெரிய விஷயமே தவிர, எங்களுக்கு அல்ல.” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
தற்போது, கமல் 237 படத்திலும், ரஜினி ஜெயிலர் - 2 படத்திலும் நடித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் கமல் கதாநாயகனாக நடித்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினி. தொடர்ந்து, மூன்று முடிச்சு, 16 வயதினிலே என 18 படங்கள் இணைந்து நடித்தனர்.
இறுதியாக, 1985 ஆம் ஆண்டு வெளியான ஜெராஃப்தார் என்ற ஹிந்தி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.