தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு செய்த தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி காலமான செய்தி சினிமாவை நீண்ட காலமாக கவனித்துக் கொண்டிருந்தவர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயதில் மூப்பு அடைந்திருந்தாலும் சாலை விபத்தில் பலியானது பலருக்கும் துயரத்தை தந்திருக்கிறது. ஒன்றா, இரண்டா? 99 திரைப்படங்களைத் தயாரித்தவர். இதில், தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் புதிய இயக்குநர்களை, புதுமுக நடிகர்களை, வித்தியாசமான கதைகளை அறிமுகப்படுத்திய பெருமை ஆர். பி. சௌத்ரிக்கே சொந்தமானது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும், ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ வழங்கும் என திரையில் பெயர் வந்தாலே கைதட்டும் கூட்டத்தை உருவாக்கி வைத்தவர் ஆர். பி. சௌத்ரி.

1988 ஆம் ஆண்டு மலையாளத்தில் அதிபாபம் படம் மூலம் தயாரிப்பாளராக திரைவாழ்வைத் துவங்கிய ஆர்.பி. சௌத்ரி, தமிழில் புது வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கான வசந்தகாலத்தை துவங்கி வைத்தார் என்றே கூற வேண்டும். அப்படத்தில் இயக்குநர் விக்ரமனை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர், தொடர்ந்து புரியாத புதிர் மூலம் கேஎஸ் ரவிக்குமாரையும் இயக்குநராக்கினார்.
அபிராமி (திலிப் குமார்), சொல்லாமலே (சசி), சிம்மராசி (ஈரோடு சௌந்தர்), துள்ளாத மனமும் துள்ளும் (எழில்), நீ வருவாய் என (ராஜகுமரன்), ஆனந்தம் (லிங்குசாமி), திருப்பாச்சி (பேரரசு) என தன் தயாரிப்பில் இவர் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் இன்றும் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் உள்ளனர்.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிறப்பம்சமே மிகக்குறைவான பட்ஜெட்டில் தரமான திரைப்படங்களை எடுத்து வணிக ரீதியாகவும் வெற்றி பெறுவார்கள் என்பதே.

சேரன் பாண்டியன், அபிராமி, நாட்டாமை, பூவே உனக்காக, சூர்ய வம்சம், சொல்லாமலே, ஆனந்தம், சமுத்திரம், புன்னகை தேசம் உள்பட ஏராளமான வெற்றிப்படங்கள் ஆர். பி. சௌத்ரிக்கு அமைந்திருக்கிறது. சூப்பர் குட் பிலிம்ஸ் என்றாலே 100 நாள்கள் ஓடத்தகுதியான படங்களாகவே இருக்கும் என்கிற ரசிக மனப்பான்மை வளர்ந்ததற்கு முக்கிய காரணம், படத்தின் கதாநாயாகனாக கதைகளே இருந்திருக்கின்றன.
தமிழ் ரசிகர்களுக்கான கமர்சியல் திரை ரசனையை வளர்த்ததில் சூப்பர் குட் பிலிம்ஸ்-க்கு முக்கிய பங்குண்டு. குடும்ப உறவுகளின் நெகிழ்ச்சியான பக்கங்களைப் பேசும் சூரிய வம்சம், ஆனந்தம், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற குடும்பங்கள் கொண்டாடும் பட்ஜெட் படங்களைக் கொடுத்து இப்படியும் கமர்சியல் படங்களைத் தயாரிக்கலாம் என பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு நம்பிக்கையும் அளித்தார்.
சொல்லாமலே படத்தின் ஹிந்தி ரீமேக்கான, ’பியார் திவானா ஹோதா ஹய்’ படத்தையும் நேரடியாக ஹிந்தியில் தயாரித்து கவனம் பெற்றார்.
இந்த மாதிரி கதைகளைத்தான் தயாரிப்பேன் என்றில்லாமல் ஜன ரஞ்சக அம்சங்கள் கொண்ட கதைகளையும், ஈ, ரௌத்திரம், மாரீசன் போன்ற சமூக பிரச்னைகளைப் பேசும் படங்களையும் சௌத்ரி தயாரித்தது கவனிக்க வேண்டியது.
1990 - 2010 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தீவிரமான சினிமா தயாரிப்பில் இருந்த ஆர். பி. சௌத்ரி ஆண்டிற்கு குறைந்தது 5 படங்களையாவது தயாரித்தவர். 90-களின் இறுதிவரை உச்சத்தில் இருந்த சூப்பர் குட் பிலிம்ஸ் நடிகர் விஜய்யின் ஜில்லா படம் வரை ஆரோக்கியமான வணிகத்திலேயே இருந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நிலவும் கதாநாயகர்களின் சம்பள உயர்வு, திரையரங்கங்களுக்கான வணிகம் என பல வகைகளிலும் பெரிய தயாரிப்பாளர்களுக்கு சாதகமற்ற சூழல் நிலவுவதால் தயாரிப்பிலிருந்து ஆர்.பி. சௌத்ரி விலகியிருந்தார். இவர் தயாரிப்பில் இறுதியாக வெளியான மாரீசன் திரைப்படம் சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாகும். 100-வது படத்தை நடிகர் விஜய்யை வைத்து தயாரிக்கலாம் எனக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், விஜய் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவுகள் பல நூறு கோடிகளைக் கடக்கும் என்பதால் அத்திட்டத்தைக் கைவிட்டு நல்ல கதைக்காகக் காத்திருந்தார். இந்த நிலையில், ஆர். பி. சௌத்ரி தன் நூறாவது படத்தைத் தயாரிக்காமல் மறைந்தது அவரது நெருங்கிய நண்பர்களுக்கும் திரை ரசிகர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
இனி சூப்பர் குட் நூறாவது படத்தைத் தயாரித்தாலும் அதைக் காண ஆர். பி. சௌத்ரி இருக்க மாட்டார் என பலரும் தங்களின் வருத்தங்களையும் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் மாற்றங்களை ஏற்படுத்திய பட்டியலில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்த ஆர். பி. சௌத்ரிக்கு அஞ்சலி!
The death of veteran Tamil cinema producer R.b. Choudhary has come as a shock to many.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது ஆர். பி. சௌத்ரி போட்ட பிச்சை... கண்கலங்கிய விக்ரமன்!

ஆர்.பி. சௌத்ரி மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
பிரியதர்ஷனின் 100-வது திரைப்படம்... புதிய உலக சாதனை!
வீடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


