
இதயமும் ஆன்மாவும்... உருக்கமாக பேசிய அசோக் செல்வன்!
அன்பில் அவன் திரைப்படம் குறித்து அசோக் செல்வன்...

அசோக் செல்வன்
நடிகர் அசோக் செல்வன் அன்பில் அவன் திரைப்பட நிகழ்வில் பேசியுள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அசோக் செல்வன், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு முதலில் நன்றி. ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் எனக்கு மிகப்பெரிய பலம். அந்த வரிசையில் ‘அன்பில் அவன்’ படத்தையும் பார்க்கிறேன். காதல் கதையாகத் தொடங்கி, த்ரில்லர், ஆக்ஷன் எனப் பல ஜானர்களில் பயணிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்துப் பலர் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இதன் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்.
படம் வெளியானது முதல் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் வெளியானாலும், படம் தொடர்ந்து வளர்ந்து தற்போது லாபகரமான நிலையை எட்டியிருக்கிறது. இன்னும் பலர் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்களின் விமர்சனங்களை மட்டும் நம்பாமல், படத்தைப் பார்த்து உங்களுடைய கருத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் படம் பின்னாளில் இன்னும் அதிகமாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் கார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் கௌதம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்துக்காக அனைவரும் முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறோம். எனது பெற்றோர், மனைவி மற்றும் குடும்பத்தினர் அளித்த ஆதரவும் முக்கியமானது. அபி உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினர், நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க முடிந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நானும் சினிமாவுக்கு வருவதற்காகப் பல ஆடிஷன்களில் பங்கேற்றிருக்கிறேன். அதனால் திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது. மஹா, கதிர், ஆகாஷ், பிரவீன், தீபன் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் நல்ல அடையாளத்தைத் தந்திருப்பதாக நம்புகிறேன். காதலின் ஆழத்தையும் உணர்வுகளையும் பேசும் இந்தப் படம், காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் எனப் பலருக்கும் நெருக்கமான அனுபவமாக இருக்கும். இன்னும் திரையரங்கில் பார்க்காதவர்கள் அவசியம் பார்த்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
Actor Ashok Selvan spoke at the event for the movie Anbil Avan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







