பரிதாபங்கள் கோபி, சுதாகரை நினைவுகூர்ந்த நடிகர் டிராவிட்!
தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய படங்கள்தான் மற்ற மொழிகளிலும் கவனம் பெறும் என நடிகர் டிராவிட் செல்வம் பேசியது குறித்து...

டிராவிட் செல்வம் - DNS
தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய படங்கள்தான் மற்ற மொழிகளிலும் கவனம் பெறும் என்று நம்புவதாக நடிகர் டிராவிட் செல்வம் தெரிவித்துள்ளார்.
ட்ரோன்ஸ் திரைப்படம் அக். 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில், நடிகர் டிராவிட் செல்வம் பேசியதாவது:
இங்கு வந்திருக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்குச் சற்று பதற்றமாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால்,
டியூட் படத்தை முடித்திருந்தபோது இந்தக் கதையைக் கேட்டேன். என்னை அழைத்து, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றும், இரண்டு கதாநாயகிகள் இருப்பதாகவும் சொன்னார்கள். அதற்கு நான், இரண்டு கதாநாயகிகள் இருக்கிறார்கள் என்றால் என்னை ஏன் அழைக்கிறீர்கள்? நான் ஏற்கெனவே பரிதாபங்கள் நிகழ்ச்சியில் இதுபோன்ற விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறேனே என்று கேட்டேன். அதற்கு, எவ்வளவு நாள்தான் இப்படியே நடிப்பீர்கள்? நீங்களும் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள். அதனால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
ஆரம்பத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட ஜானருக்குள் அடக்கிவிட முடியாத படமாக டிரோன்ஸ் உருவாகியிருக்கிறது. இதில் ஹாரர், நகைச்சுவை எனப் பல அம்சங்கள் உள்ளன.
குழந்தைகள் ரசிக்கக்கூடிய மோகினிப் பேய், மோகினிப் பாட்டி, தேவதை எனப் பல்வேறு விதமான வித்தியாசமான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு சிறிய படத்தில் அரசியல் கருத்தையும் அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்துக் கொடுப்பதற்கு தயாரிப்பாளருக்குத் தைரியம் வேண்டும்.
அந்த வகையில், இப்படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் ஜி. எம். மோர்கன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா தயாரிப்பாளர்களும் இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள்.
ஆனால், தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய படங்கள்தான் மற்ற மொழிகளிலும் கவனம் பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படமும் அப்படிப் பலரிடம் சென்றடையும் என எதிர்பார்க்கிறேன். இயக்குநர் ராகவ் மிர்தாத் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவரும் சிறப்பானவர்கள். முதலில் குரேஷி அண்ணா, மிகவும் ஜாலியான மனிதர். பத்து அடி தூரம் நடந்தால்கூட, அதற்குள் பல காமெடி கவுண்டர்களைப் போட்டு நம்மைக் கலாய்த்துவிடுவார்.
அஞ்சலி நாயர் மிகச் சிறந்த நடிகை. அவர் அழுது நடித்தால் பார்ப்பவர்களையும் அழ வைத்துவிடுவார். சித்தி இத்னானி எங்கள் படக்குழுவில் அனுபவம் மிக்கவராக இருந்தார். ஆனால், எந்தப் பந்தாவும் இல்லாமல் முதல் நாளிலிருந்தே எங்களை நண்பர்களாகப் பழகி, எளிதாக நடிக்க உதவினார். அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம்.
இறுதியாக, சினிமாவாலா சதீஷ் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான வாய்ப்பு கிடைத்ததற்கு அவர்தான் காரணம் என்று நம்புகிறேன். அவர்தான் என்னுடைய பெயரைப் பரிந்துரைத்து இந்தப் படத்தில் நடிக்க வைத்ததாகச் சொன்னார். அதேபோல், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் அண்ணன்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பரிதாபங்கள் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
Summary
Actor Dravid selvam recalls Parithabangal Gopi and Sudhakar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


