பரமபதம் விளையாட்டா, படமே விளையாட்டா?: விமர்சனம்

ஓடிடி என்பதால் அப்பப்போ படத்தை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது...
பரமபதம் விளையாட்டா, படமே விளையாட்டா?: விமர்சனம்

நல்லவேளை, இந்தப் படத்தைத் தியேட்டரில் பார்க்கிற ஆபத்திலிருந்து தப்பிட்டோம். ஓடிடி என்பதால் அப்பப்போ படத்தை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது.

ஓபனிங்லேயே ஒரு சின்ன குழப்பம், வேல ராமமூர்த்தின்னா வில்லன்தானே. இல்ல, அவரு நல்லவரு என்பதை நம்புறதுக்குள்ளேயே ரொம்பப் படம் போயிருது, காட்சிகள்ள எது பழசு, எது புதுசுன்னு பிடிபடறதுக்குள்ளயும் தாவு தீந்துபோகுது.

வாரிசு அரசியல்லாம் கூடாதுங்கற நேர்மையான அரசியல் தலைவர். அவருக்கு வெளிநாட்டுல வேலைபார்க்கிற ஒரு டாக்டர் மகன். தலைவர போட்டுத் தள்ளிட்டு அதிகாரத்தைப் பிடிக்க நினைக்கிற இரண்டு அடுத்தகட்டத் தலைவர்கள்.

தேர்தல் வர்ற நேரத்துலே உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகிற தலைவர யாரோ போட்டுத் தள்ளிற்றாங்க. அண்மையில இறந்துபோன ஒரு தலைவர பத்திதான் சொல்றங்களோன்னு பலருக்குத் தோண வைக்கிறாங்க. இந்த சாவுல நம்ம டாக்டர் திரிஷாவத் தவிர யாருக்குமே சந்தேகம் வரல. அவங்க அதுக்குக் கொஞ்சம் ஆதாரம் வச்சிருக்காங்க. அத அழிக்க வில்லன் கோஷ்டி துரத்துது, இடையிலே சிக்கிக்கொள்கிற திரிஷாவோட பேச இயலாத குழந்தை.

இதுவரை இந்த மாதிரி வந்த த்ரில் படங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வொரு விஷயத்த உருவி கலந்துகட்டி படமாக்கியிருக்காங்க.

கிளைமாக்ஸையும் அக்யூஸ்டு யாரு என்பதையும் கொஞ்ச நேரத்திலேயே கூட உட்கார்ந்திருந்த குழந்தையே ஊகித்துச் சொல்லிவிட்டது.

கார்லே இருந்து பெயிண்டைக் கொட்டவிட்டுக்கொண்டே சென்றால் அந்தத் தடத்தைப் பின்தொடர்ந்து வந்து கண்டுபிடித்துவிடலாம் என்பது திரிஷாவுக்குத்தான் தெரியவில்லை என்றால், பார்க்கிறவங்களுக்கெல்லாம்கூடவா தெரியாது... என்னய்யா இது, நாம்ப எவ்வளவு சினிமா பார்த்திருக்கிறோம்.

நாய் வளர்த்துக்கிட்ட வில்லனோட ஒரு அடியாள் வர்றாரு பாருங்க, நாய் குலைக்கிறதும், பதிலுக்கு அவரு குலைக்கிறதும் தாங்க மிடில. அப்புறம் அந்த ஹீரோ கம் வில்லன், அவரு வேற ஏன் மீசையில்லாம இப்படி மிரட்ராறுன்னு தெரியல.

திரிஷாவக் காப்பாத்த ஒருத்தரு வர்ராறு, அவரு வில்லனா, ஹீரோவா, காமெடியனா... கடைசி வர புரிபடல.  கிளைமாக்ஸ்ல சண்டையின்னா சண்டை, அப்படியொரு சண்டை. அவருதான் போடராறு. நிறைய இங்கிலீஷ் படங்கள ஞாபகம் வருது. படத்துல கொஞ்சம் மலையாள லூசிபர் பட ஸீன்களும்கூட கிட்டத்தட்ட அப்படியப்படியே வருது.

நல்ல நடிகைதான். ரொம்ப நாளா நடிக்கிறாங்கதான். யங்கா இருக்கிற மாதிரிதான் இருக்காங்க. அதுக்காக இப்படி திரிஷாவை இனிமேல ரொம்ப க்ளோசப் எல்லாம் காட்டாதீங்கப்பா. கஷ்டமா இருக்கு.

டெக்னாலஜிதான் நல்ல முன்னேறிருச்சு, உங்களுக்கே தெரியுதுல்ல. ஒரு நல்ல கதைய, புதுசா கண்டுபிடிங்கப்பா. திரிஷா 65, 70, 75-ன்னு நிறைய படம் எடுக்கலாம்.

படத்துல பாராட்டித் தீர வேண்டிய முக்கியமான ஒன்னு இருக்கு, இரவுக் காட்சிகளின் படப்பிடிப்பு.

என்னவோ போங்கப்பா, வருஷப் பிறப்பும் அதுவுமா, தூக்கத்தக் கெடுத்துப் பார்த்ததுல ரெண்டு மணி நேரத்துக்கும் மேல அவுட். பரமபதம்தான் விளையாட்டுன்னா,  இப்பல்லாம் படம் எடுக்கிறதுகூட விளையாட்டாப் போச்சு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com