சார்பட்டா பரம்பரை - ஷார்ப்பான களம்

வடசென்னை மக்களின் வலி நிறைந்த வாழ்வியலின் கொண்டாட்டத் தருணங்களை தூக்கி சுமந்திருக்கிறது சார்பட்டா பரம்பரை.
சார்பட்டா பரம்பரை - ஷார்ப்பான களம்

நாம் அனைவரும் பார்த்து ரசிக்கும் இந்த சென்னையின் தொடக்கம் வடசென்னை. வடசென்னை மக்களின் வலி நிறைந்த வாழ்வியலின் கொண்டாட்டத் தருணங்களை தூக்கி சுமந்திருக்கிறது சார்பட்டா பரம்பரை. 
இயக்குநர் பா.ரஞ்சித் இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

வடசென்னையில் இரண்டு குத்துச்சண்டை பரம்பரைகளுக்கிடையே  நடக்கும் குத்துச் சண்டைப் போட்டிகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த ஆர்யாவும், இடியாப்ப நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்த ஜான் கோகனும் தங்கள் பரம்பரைகளுக்காக மோதி இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே படத்தின் ஒன்லைன். 

இத் திரைப்படத்தில் கபிலனாக ஆர்யா, வாத்தியார் ரங்கனாக பசுபதி, துரைக்கண்ணாக ஜி.எம்.சுந்தர், வேம்புலியாக ஜான் கோகன், மாரியம்மாவாக நாயகி துஷாரா, கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்யாவின் திரை வாழ்வில் பேசப்படும் திரைப்படங்களில் இந்த படம் நிச்சயம் இருக்கும். அவரைப் போலவே இந்த படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களது கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக செய்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் ரஞ்சித்தின் பிரதான ஒளிப்பதிவாளரான ஜி.முரளி 1975-77 ஆண்டு காலத்தை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அந்த காலக்கட்டத்தின் இருள் சூழ்ந்த இரவுகளை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. குறிப்பாக லைட்டிங் அருமையாக உள்ளது. கலை இயக்குநர் ராமலிங்கத்தின் நேர்த்தியான குத்துச்சண்டை அரங்க வடிவமைப்புகள், ஆடை வடிவமைப்பாளர் ஏகனின் பணிகள் உள்பட பலரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மற்றொரு பலமாக இருப்பது சந்தோஷ் நாராயணனின் இசை. பின்னணி இசையும், தேவையான இடத்தில் மட்டும் வரும் பாடல்கள் நம்மை தலையாட்டச் செய்கிறது.  செல்வாவின் படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது. 

இத் திரைப்படத்தில் ஆர்யாவின் அம்மா, மனைவி கதாப்பாத்திரங்கள் சிறப்பாக உள்ளன. குறிப்பாக குடிக்கு அடிமையான ஆர்யாவுடன் சண்டையிடும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார் மாரியம்மாவாக வரும் நடிகை துஷாரா.

அரசியல் பேசுகிறதா?  

இந்தப் படத்தில் கடந்த 1975-ஆம் ஆண்டு இருந்த நெருக்கடி நிலை குறித்த அரசியல் பேசப்படுகிறது. குறிப்பாக அப்போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட செய்தி உள்ளிட்டவைகள் இந்த படத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல ரேவ் பகுதியில் இருந்து வரும் ஆர்யா சண்டையில் பங்கேற்க அவரது ஜாதி தடையாக இருப்பதை சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவர்களே சுட்டிக்காட்டி பேசும் வசனங்களும் காட்சிகளும் வருகின்றன. இந்த ரோசமான ஆங்கில குத்துச்சண்டையின் பின்னணியில் இருந்த போட்டியும், பொறாமையும், சூழ்நிலையும் எப்படி வடசென்னை வீரர்களை அடியாளாகவும், ரவுடிகளாகவும் மாற்றியது என்பது குறித்த அரசியலை இந்தப் படம் பேசுகிறது. 

இந்த படத்தின் திரைக்கதை, வசனத்தை இயக்குநர் ரஞ்சித்துடன் தமிழ்பிரபா இணைந்து எழுதியுள்ளார். படத்தில் வரும் பல வசனங்கள் விளிம்புநிலை சமூகங்களுக்கான உரிமைக்குரலாக தெரிகிறது. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் பசுபதி ஆர்யாவிடம், கஷ்டபட்டு முன்னாடி கொண்டு வந்த தேரை, பின்னாடி தள்ளிடாதே என்ற வசனம். 

வடசென்னையும் குத்துச்சண்டையும்

துறைமுகத்தில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களுக்கு ஊழியம் செய்ய உருவாக்கப்பட்டதே கருப்பர் நகரம் என அழைக்கப்பட்ட வட சென்னை. அப்படி இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயர்களின் விருப்பமான பொழுதுபோக்கு பாக்ஸிங். அந்த விளையாட்டை  தங்களிடம் வேலை பார்த்த பணியாளர்களுக்கு பயிற்றுவித்து, அவர்களுக்குள் சண்டையிடச் செய்து ரசித்தனர். பின்னர், இது அந்த பகுதி முழுவதும் பரவி ரோசமான ஆங்கில குத்துச்சண்டையானது. 

வடசென்னையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த சார்பட்டா, இடியாப்ப நாயக்கர், சுண்ணாம்புக்குளம், எல்லப்ப செட்டியார் பரம்பரைகள் இருந்துள்ளன. 1970-களின் தொடக்கத்தில் இருந்து 1980-க்குள் இந்த பரம்பரைகளுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடந்துள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிற்காலத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக இந்த குத்துச்சண்டை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால்,  இப்பரம்பரைகளைச் சேர்ந்த பலர் இன்றளவும் வடசென்னை பகுதிகளில் பாக்ஸிங் கற்றுக்கொடுத்து வருகின்றனர். பலர் மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

அமெச்சூர், தொழில்முறை என இரண்டு வகைப்பட்ட குத்துச் சண்டைகளில் தொழில்முறை குத்துச்சண்டை முழுவதுமாக வழக்கொழிந்து விட்டது. அமெச்சூர் வகை குத்துச்சண்டை ஒய்எம்சிஏ பாக்ஸர் எனப்படுகிறது. இதில் பர்ஸ்ட் வெய்ட், செகண்ட் வெய்ட், பேப்பர் வெய்ட், பின் வெய்ட், லைட் ப்ளை, ப்ளை, பெதர், பேன்தம், லைட் வெல்டர், வெல்டர், மிடில் வெய்ட், ஹெவி வெய்ட், சூப்பர் ஹெவி வெய்ட் என பல வகைகள் உண்டு. 

ஆங்கிலேயர்கள் காலத்தில் ஒரு பொழுதுபோக்காக கற்றுத் தரப்பட்ட இந்த விளையாட்டு, பின்னர் சமூக சூழல் காரணமாக தனிப்பட்ட சண்டையாகி, குழு மோதலாகிறது. நெடுங்காலத்துக்குப் பின் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் தகுதியாக அது மாறியுள்ளது.  உரிய வழிகாட்டுதல் இன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கத்தியை தூக்கியவர்களும், வேம்புலி, டான்சிங் ரோஸ் போன்றவர்களை துவம்சம் செய்து அரசு பணிகளைப் பெற்றவர்களும்  வலம் வரும் வீரம் சொறிந்த களத்தில் கருப்பர் நகரத்து கபிலன்கள் கனவுகளுடன் இன்றும் காத்திருக்கின்றனர் உரிய அங்கீகாரத்துக்காக.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com