சார்பட்டா: ரோசமான குத்துச்சண்டை வீரனின் வாழ்வியல் அனுபவம்

சார்பட்டா உலகை அறிமுகப்படுத்தி, அவ்வுலகுக்கு அழைத்துச் சென்று குத்துச்சண்டை போட்டிகளையும் கபிலனின் வெற்றியையும் நேரில் காட்டிய ரஞ்சித் மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள்.
சார்பட்டா: ரோசமான குத்துச்சண்டை வீரனின் வாழ்வியல் அனுபவம்

சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் இடையிலான சண்டையிலிருந்து கதை தொடங்குகிறது. குத்துச்சண்டையில் இடியாப்ப பரம்பரையைச் சேர்ந்த வேம்புலியைத் தோற்கடிக்க சரியான வீரர் இல்லாமல் சார்பட்டா பரம்பரை தொடர்ந்து தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தொடர் தோல்வி சார்பட்டா பரம்பரையின் மானப் பிரச்னையாக மாற வேம்புலியைத் தோற்கடிக்க ரங்கன் வாத்தியாருக்காக கபிலன் எவ்வாறு களத்துக்குள் வருகிறான், யார் கபிலன், கறுப்பர் நகரத்துக் கபிலன் இறுதியில் வேம்புலியை வீழ்த்தினானா, இல்லையா என்பதுதான் சார்பட்டா பரம்பரையின் கதை.

சார்பட்டா பரம்பரையைக் கதையாகவும் படமாகவும் அல்லாமல் ஒரு வாழ்வியலாகவே பா. ரஞ்சித் காட்டியிருக்கிறார். 

இதை 1975-76 இல் நடப்பது போல் உருவாக்கி அவசரநிலைக் காலத்துடன் பொருத்தி எவ்வித சமரசமுமின்றி அரசியல் பேசியிருக்கிறார். கதை அம்சத்துடனே ரங்கன் வாத்தியார் திமுக பிரமுகராக இருப்பதும், அவசர நிலை நடவடிக்கைக்கு எதிராக அரசியல் மேடையில் குரல் கொடுப்பதும், இதனால் ஏற்படும் விளைவுகளும் நம்மை அந்தக் காலத்துக்கும் கதை உலகத்துக்கும் அழைத்துச் சென்று ஒரு வாழ்வியல் அனுபவத்தைத் தர உதவுகிறது.

குறிப்பாக 1970களின் காலத்தை உறுத்தலின்றி நம்பி பார்ப்பதற்கு கலை இயக்குநர் ராமலிங்கம் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. குத்துச்சண்டை நடைபெறும் இடங்கள், பயிற்சி இடங்கள் உள்ளிட்டவை அக்காலத்திற்கேற்ப அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

வாழ்வியல் அனுபவத்திற்கு மற்றொரு காரணம், கதாபாத்திரங்களின் தேர்வு. கதாபாத்திரங்கள் அனைத்தும் கதையில் மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. கபிலன் கதாபாத்திரத்துக்கு அளவெடுத்தது போல் ஆர்யா இருக்கிறார். ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தை ஏற்று வாழ்ந்திருக்கிறார் பசுபதி. டான்சிங் ரோஸ் (ஷபீர்), டேடி (ஜான் விஜய்) கதாபாத்திரங்கள் படத்தின் மனதில் நிற்கக்கூடிய முக்கியக் கதாபாத்திரங்களாக வருகின்றன. 

வேம்புலி (ஜான் கொக்கேன்), ராமன் (சந்தோஷ்), வெற்றிச்செல்வன் (கலையரசன்), கபிலனின் அம்மா பாக்கியம் (அனுபமா), மாரியம்மா (துஷாரா விஜயன்) அனைவரும் உடல்மொழியையும், வடசென்னை பேச்சுமொழியையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பது சார்பட்டா கதை உலகை அந்நியமாக்காமல் காக்கிறது.

இடியாப்ப பரம்பரையில் தொடக்கம் முதலே பார்வை முழுவதையும் வேம்புலி பக்கம் திரும்ப வைத்து, முதல் பாதி முடிவதற்கு சற்று முன்பு டான்சிங் ரோஸுக்காக அமைக்கப்பட்ட காட்சிகள் ஆச்சரியப் பரிசாக அமைந்தன. நிச்சயம் பேசக்கூடிய கதாபாத்திரமாக டான்சிங் ரோஸ் இருக்கும். படத்திலிருந்து வெளியே வந்தாலும் ரங்கன் வாத்தியாரும், டான்சிங் ரோஸும் நிச்சயம் நம்மைத் துரத்திக்கொண்டே இருப்பார்கள்.

பொதுவாக விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட படங்களில் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்ட ஸ்லோமோஷன் காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். சார்பட்டா பரம்பரையிலும் ஸ்லோ மோஷன் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ஒப்பீட்டளவில் ரஞ்சித் அதைப் பெரிதளவில் தவிர்த்திருக்கிறார். அது குத்துச்சண்டைப் போட்டியை நேரில் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது. முரளியின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் ரஞ்சித்தின் நோக்கத்திற்கு வலு சேர்க்கிறது. 

எனினும் படத்தின் நீளம் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கபிலனின் வாழ்க்கை தடம் மாறும் விஷயங்களை சற்று குறைத்திருக்கலாமோ என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

படத்தின் 'டச்':

  • வெற்றிக்கு முந்தைய இரவில் கபிலனுடனான உரையாடலில், "ஆட்டம்தான தோத்துதா போ.. பரம்பரைல என்னாத்துக்குடா மானத்த கொண்டாந்து வைக்கறீங்க, நல்லா ஆடுனா ஜெயிக்கப்போற.. கவலைப்படாத நான் சொல்றன் நீதா ஜெயிப்ப" என்ற மாரியம்மாவின் வசனம்.
  • தோல்விக்குப் பிறகு வேம்புலியுடனான உரையாடலில், "இன்னிக்கு இவன்கிட்ட ஆடுன பாரு அதுதா ஆட்டம், நீ தோக்கல வேம்புலி.." என்ற டான்சிங் ரோஸின் வசனம்.
  • நம் ஒவ்வொருவரின் வெற்றிக்கும் நிச்சயம் மாரியம்மாவின் வசனமும் தேவை, டான்சிங் ரோஸின் வசனமும் தேவை.
  • கபிலனின் வாழ்வைக் குத்துச்சண்டை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுமோ என்ற அச்சத்திலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பாக்கியம், குத்துச்சண்டைதான் அவன் வாழ்வை மீண்டும் நல்வழிக்கு அழைத்துச் செல்லும் என்பதால் மீண்டும் குத்துச்சண்டையில் ஈடுபட உந்துதலாக இருப்பது.
  • முதல் பாதியில் சார்பட்டா பரம்பரைக்காகவும், ரங்கன் வாத்தியாருக்கும் வெற்றி பெறத் துடிக்கும் கபிலன், இரண்டாவது பாதியில் தனது அடையாளத்துக்காகவும் எளிதில் கிடைத்திராத வாய்ப்பைப் பயன்படுத்தி த் தன்னை நிரூபிக்கவும், சார்பட்டா பரம்பையிலேயே தனது வெற்றிக்கு எதிராக அணி திரள்பவர்களால்கூட வெற்றி பெற்ற பிறகு அதைப் புறக்கணித்துவிட முடியாது என்பதை உணர்த்தவும் வெற்றி பெறும் கபிலன்.
  • கபிலன்களின் வெற்றி ஒருபோதும் தனிமனித வெற்றியாக இருக்காது, மக்களின் வெற்றியாகவே இருக்கும் என்பதை பதிவிட்டது.

மொத்தத்தில் சார்பட்டா உலகை அறிமுகப்படுத்தியதற்காகவும், அவ்வுலகுக்கு அழைத்துச் சென்று குத்துச்சண்டைப் போட்டிகளையும் கபிலனின் வெற்றியையும் நேரில் காட்டியதற்காகவும் ரஞ்சித் மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com