இது நம்ம காலம் - சார்பட்டா பரம்பரை I திரை விமர்சனம்

ஒருபுறம் குத்துச்சண்டையில்  வெற்றி  தோல்வி  எனப் பார்க்கப்பட்டாலும் மறுபுறம் பரம்பரைகளின் மானப் பிரச்னையாக உருவாகிக்கொண்டே இருக்கிறது. 
இது நம்ம காலம் - சார்பட்டா பரம்பரை I திரை விமர்சனம்
இது நம்ம காலம் - சார்பட்டா பரம்பரை I திரை விமர்சனம்


'ரோசமான ஆங்கில குத்துச்சண்டை' என்கிற பெயரில் பிரிட்டிஷார் அறிமுகம்  செய்து வைத்த ஒரு குத்துச்சண்டை முறையை விரிவாக்கம் செய்து ஒரே குழுவாக இருந்து  குத்துச்சண்டைகளில் ஈடுபடுவோர் பிற்பாடு  தனித்தனி பரம்பரைகளாக பிரிகிறார்கள்.

இவற்றில் சார்பட்டா பரம்பரை, இடியாப்ப நாயக்கர் பரம்பரை, எல்லப்பச் செட்டியார் பரம்பரை, கறியார பாபுபாய் பரம்பரை என பல பரம்பரைகள் இருந்தாலும் சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறார்கள்.

ஆனால் காலமாற்றத்தில் இடியாப்ப நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்த ' வேம்புலி'  ( நடிகர்  ஜான் கொக்கேன்) யாராலும் தோற்கடிக்க முடியாத  வீரராக வலம் வருகிறார். வேம்புலி  சார்ந்த  பரம்பரையைத் தோற்கடித்து திரும்பவும் சார்பட்டா பரம்பரையின் பெயரை நிலைநாட்ட அந்தப் பரம்பரையின் வாத்தியார் ரங்கன் (நடிகர் பசுபதி) தீவிர பயிற்சிகளை வீரர்களுக்கு அளித்து போட்டியில் களம் இறக்குகிறார்.

சார்பட்டா பரம்பரையின் முக்கிய குத்துச்சண்டை வீரர்களான ராமன் ( சந்தோஷ் பிரதாப்) மற்றும் வெற்றிச்செல்வன் (கலையரசன்) இருக்கிற நிலையில் சார்பட்டா பரம்பரைக்குள் நிலவுகிற மோதல்களில் இருவரையும் விடுத்து அதுவரை குத்துச் சண்டைப் போட்டியில் ஒருமுறைகூட  களம் காணாத  கபிலனை (ஆர்யாவை) போட்டிக்கு  தயார்  செய்கிறார் ரங்கன்.

போட்டி நடைபெறும் நாளில் மிசா தடைச் சட்டத்தில் தி.மு.க. பிரமுகரான  வாத்தியார் ரங்கன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்படுகிறார்கள். போட்டி நடந்த மேடையில் கபிலனைத் தாக்கி, மோதலை நடத்தி, ஆட்டத்தை ரத்து செய்ய வைக்கிறார்கள் சிலர். 

படத்தில் நிறைய  குத்துச்சண்டை காட்சிகள் இருந்தாலும் இடியாப்ப நாயக்கர் பரம்பரையின் டான்சிங் ரோஸ் (சபீர் கல்லரகள்) உடன் கபிலன் மோதும்  சண்டைக் காட்சி தமிழ் சினிமாவின் தொடர்ந்து பேசப்படும்  சண்டைக் காட்சிகளில் ஒன்றாக இருக்கும். ஒருபுறம் குத்துச்சண்டையில்  வெற்றி  தோல்வி  எனப் பார்க்கப்பட்டாலும் மறுபுறம் பரம்பரைகளின் மானப் பிரச்னையாக உருவாகிக்கொண்டே இருக்கிறது. 

மிசாவிற்குப் பின் தவறான வழிகளில் செல்லும் கபிலன் ஒருநாள் தன்னைத்  தானே நொந்துகொண்டு மீண்டும் வேம்புலியை வெல்லப் பயற்சியைத் தொடங்குகிறான் .  கடுமையான குழப்பங்களுக்கும், துரோகங்களுக்கும்  இடையே  கபிலன் சார்பட்டா பரம்பரையின் புகழை மீண்டும் நிலை நிறுத்தினாரா இல்லையா என்பது மீதிக் கதை.

சொல்லவந்த கதையில் எந்த விதமான தேவையற்ற  குழப்பங்களுக்கும்  இடம் கொடுக்காமல் கொண்டு செல்கிறார் இயக்குநர் பா. இரஞ்சித். கபிலனின் காட்சிகள் மட்டுமல்லாது துணை நடிகர்கள் அத்தனை பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை 100 சதவீதம் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த மிகையான நடிப்புகளும் இல்லாத  உண்மையான முகங்கள். குறிப்பாக டாடியாக வரும் ஜான் விஜய், பாக்கியமாக வரும் அனுபமா குமார், மாரியம்மாவாக வரும் துஷாரா விஜயன்,  டான்சிங் ரோஸாக வரும் சபீர் கல்லரகள், வேம்புலியாக வரும்  நடிகர்  ஜான் கொக்கேன்   நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். நடிகர் பசுபதி தன்னுடைய நேர்த்தியான உடல் மொழியால் மனதில் நிற்கிறார். 

பா. இரஞ்சித் வழக்கம்போல திரைக்கதையில் தன்னுடைய அரசியலைப் பேசுகிறார், திராவிட இயக்கங்களின் போக்கு, மிசா தடைச்சட்டம், ஆட்சிக் கலைப்பு, இனவாதத்தைக் கடுமையாக சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலியை  சில காட்சிகளில்  எடுத்துக் காட்டியது என.

நிஜ குத்துச்சண்டை வீரர்கள் பலரும் விளையாட்டை விட்டு  அரசியல்வாதிகளின் அடியாள்களாக மாறிய உண்மையையும் பதிவு செய்திருக்கிறார். படத்தின் மற்றொரு பலம் வசனம். 'இது நம்ம காலம், ஏறி  அடி கபிலா ' என்கிற வசனம் அடிக்கடி வருகிறது அர்த்தத்துடன். 

மேலும் சந்தோஷ் நாராயணின் இசை,  முரளியின் ஒளிப்பதிவு   இணைந்து செய்கிற ஜாலங்கள் ஒருபுறம் என்றால் படத்தின் கலை இயக்குநர் ராமலிங்கம் 1970-களுக்கே அழைத்துச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் மனதில்  நிற்கும்படியான 70-களின் சென்னை வீதிகளை, குத்துச்சண்டை நடைபெறும் மைதானமான கண்ணப்பர்  திடலை, பரம்பரைகள் பயிற்சி செய்யும் இடங்கள் என அத்தனை மெனக்கெடல்களுடன் குறை தேட முடியாத அபாரமான உழைப்பைக் கலை இயக்குநர் செய்திருக்கிறார்.

படத்தில் குறைகள் என சொல்வதற்கு ஒன்றுமில்லையா என்றால் இருக்கிறது - படத்தின் நீளம். ரங்கன் (பசுபதி) கைது செய்யப்பட்டதும் நடைபெறுகிற ஒரு மோதல் காட்சிக்குப் பிறகு பெரும் இழுவையாக இருக்கிறது, மீண்டும் கபிலன் சண்டைக்குத் தயாராகும் வரை. இந்தப் பகுதியைக் குறைத்து மேலும் செம்மைப்படுத்தியிருக்கலாம். தவிர, பாடல்கள் இடம் பெறும் இடங்களிலும் சில செருகப்பட்டவையாக, ஒட்டாமல் விலகியிருக்கிருக்கின்றன. 

துணிந்து ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கிறது இயக்குநர் பா. இரஞ்சித்  இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com