அதர்வாவின் 'குருதி ஆட்டம்' - படம் எப்படி இருக்கிறது?

அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் திரை விமர்சனம் 
அதர்வாவின் 'குருதி ஆட்டம்' -  படம் எப்படி இருக்கிறது?
Published on
Updated on
2 min read

குருதி ஆட்டம் என்ற தலைப்பை யோசித்துவிட்டு ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு படம் பண்றோம் என கதையை முடிவு செய்திருப்பார்கள் போல. அந்த அளவுக்கு படம் முழுக்க ரத்த வாடை. இந்த மாதிரியான படங்களில் அழுத்தமான பின் கதை இருந்தால்தான் வன்முறை காட்சிகளை நம்மால் ரசிக்க முடியும் ?

விமர்சகர்களால் பாராட்டப்பட்ட 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம். அதர்வா நாயகனாக நடிக்க, பிரியா பவானி ஷங்கர், ராதிகா, ராதா ரவி, கர்ணா ரவி, வத்சன் சக்கரவர்த்தி என பலர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். 

சண்டைக்காட்சிகள் மிக நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. 

நான் மகான் அல்ல, மெட்ராஸ் எனப் பல படங்களின் சாயலில் உருவாகியிருக்கிறது குருதி ஆட்டம். மதுரையில் டானாக ராதிகா. அவருடன் சக டானாக ராதா ரவி. இருவரும் யார் ? எப்படி டானாக ஆனார்கள்  என்பதெல்லாம் படத்தில் இல்லை. ராதிகா மதுரையையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். 

ஒரு அம்மாவாக உணர்வுகளை மிக சரியாக வெளிப்படுத்துகிறார் ராதிகா. ஆனால் மதுரையே நடுங்கும் டானாக நம்பும்படி இல்லை அவர். இரண்டாம் பாதியில் ராதா ரவி தனது பாணி நடிப்பால் சில இடங்களில் சுவாரசியப்படுத்தியிருக்கிறார். 

வழக்கம்போல அநியாயத்துக்கு நல்லவர் ஹீரோ அதர்வா, அநியாயத்தைக் கண்டால் பொங்குகிறார். அவருக்கு பார்த்தவுடன் பிரியா பவானி ஷங்கர் மேல் காதல். பிரியா பவானி ஷங்கருக்கும் காரணமே இல்லாமல் அதர்வாவை பிடித்துவிடுகிறது. இப்படி யாருடைய கதாபாத்திரங்களுமே இயல்பாக இல்லை.

கர்ணா ரவி அதர்வாவிற்கு உதவி செய்கிறார். இருவரும் நண்பர்களாக மாறுகிறார்கள். இரண்டாம் பாதியில் கர்ணா ரவி மற்றும் அதர்வாவின் நட்புதான் படத்துக்கு அடிப்படை. கிட்டத்தட்ட 'மெட்ராஸ்' கார்த்தி - கலையரசன் நட்புபோல. ஆனால் அவர்கள் நட்பை சொல்லும் அளவுக்கு படத்தில் அழுத்தமான காட்சிகள் இல்லை. 

இருப்பினும் இடைவேளை வரை பரபரப்பான காட்சிகளால் படம் சற்று சுவாரசியமாகவே நகர்கிறது. இடைவேளைக்கு பிறகே திரைக்கதை திக்கற்று தடுமாறுகிறது. குறிப்பாக வினோத் சாகர் ஏன் தன் குழந்தையை மீறி வில்லன் தரப்புக்கு துணை போகிறார் என்பதற்கு சரியான காரணங்கள் இல்லை. இவ்வளவு வன்முறைகள் நடக்கும் படத்தில் ஒரு காட்சியில்கூட காவல்துறையினர் இல்லை. 

வத்சன் சக்கரவர்த்தி மிரட்டலான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் அவர் துவக்கத்தில் இருந்தே வெறும் அடியாளாக காட்டப்படுகிறார். அதனால் படத்தின் முக்கிய வில்லனாக அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இயக்குநர் ஸ்ரீகணேஷ் தனது முதல் படத்தைப் போல சில இடங்களில் குழந்தை கதாபாத்திரத்தை வைத்து உணர்வுப்பூர்வமாக கதை சொல்ல முயன்றிருக்கிறார். 

முதலில் சொன்னது போல ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு வன்முறை படம் இந்த குருதி ஆட்டம். ஆனால் அதற்கான பின்கதைகள் இன்னும் வலுவாக இருந்திருந்தால் ரசித்திருக்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com